பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்


காட்டினேன்.3 உயிரை நீக்கி விட்டால் சடம், சக்தி என்ற இரண்டினுள் இவ்வுலகினையே அடக்கி விடலாம். சடமும் சக்தியும் ஒன்றே என்பது இன்றைய அறிவியல் கண்ட உண்மை. ஹிரோஷிமாவையும் நாகாஸ்கியையும் அழித்த சக்தி அணுவிலன்றோ அடங்கிக்கிடந்தது?

வழக்கிலுள்ள பொருள்கள்: இவ்வுலகிலுள்ள பொருள்களில் அடிப்படையானவை 92 என்று மேலே சுட்டி உரைத்தேன். எனினும், வழக்கிலுள்ளவை பன்னிரண்டுக்கு மேல் இல்லை என்பதை அறிவியலறிஞர்கள் கணக்கிட்டுள்ளனர்.இது வியப்பினும் வியப்பாகும். இதையும் விளக்க முயல்வேன். உலகிலுள்ள பொருள்களை ஆயிரம் கூறுகளாகப் பகுத்துக் கொண்டால் ஏறக்குறைய பாதி, அஃதாவது 492 பங்கு உயிரியம் (Oxygen). இந்த உயிரியம் காற்றில் ஐந்தில் ஒரு பங்கு; நீரில் ஒன்பதில் எட்டு பங்கு. இது கல்லிலும் காணப்படும் பொருளாகும். சிலிக்கன் (Silicon) என்பது 257 பங்கு; இது தரையில் நான்கில் ஒரு பங்கு மணல் எல்லாம் சிலிக்கனோடு உயிரியம் சேர்ந்த சேர்க்கைப் பொருளாகும். அலுமினியம் 74 பங்கு. இது களிமண்ணில் அதிகமாகக் காணப்படுவது. இரும்பு 47 பங்கு; இஃது உயிரியத்தோடு சேர்க்கைப் பொருளாகக் கிடைக்கின்றது. கால்சியம் என்ற சுண்ணாம்புச் சத்து 34 பங்கு. சோடியம் என்ற பொருள் 26 பங்கு; இது சோற்றுப்பில் காணப்படும் பொருளாகும். பொட்டாசியம் 24 பங்கு, இஃது அபிரேகம் முதலியவற்றில் உள்ளது. மக்னீஷியம் 19பங்கு; இது கடல் நீரிலும் உண்டு. பெட்ரோமாக்ஸ் விளக்கில் திரியாக எரிவதற்கு வெள்ளைச் சல்லடைபோல் உறையாகப் போடப்பெற்றிருப்பது இப்பொருளே.நீரியம் (Hydrogn) 9 பங்கு; நீரில் உள்ளது; இது மண்ணிலும் மணலிலும் காணக்கிடக்கின்றது. குளோரின் என்பது 2 பங்கு; இது சோற்றுப்பில் சோடியத்துடன் சேர்ந்து சேர்க்கைப் பொருளாகக் கிடைக்கின்றது. பாஸ்வரம் 1 பங்கு. இஃது எருவிற்கு இன்றியமையாத பொருள். இந்தப் பன்னிரண்டு பொருள்களே உலகில் 991 பங்கானால் மிகுந்து நிற்கும் 80 அடிப்பொருள்களும் 9 பங்கு அளவே இருக்கக் காண்கின்றோம். இந்த ஆழ்ந்த ஆய்வு நோக்கு எத்துணை உண்மைகளை விளக்கி நிற்கின்றது.


3. இந்நூல் பக். 35 காண்க.