பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்


பெயர்கள் முடிவுற்றதும், நாடுகள், அறிவியலறிஞர்கள், நகரங்கள் இவற்றின் பெயர்களையொட்டித் தனிமங்களுக்குப் பெயரிடும் முறை தோன்றியது. அமெரிசியம்-95, குயூரியம்-96, பெர்க்கிலியம்-97 ஆகியவற்றின் பெயர்களை நோக்குங்கள். இவற்றில் அமெரிசியம் அமெரிக்க நாட்டின் பெயரையொட்டியது. குயூரியம் என்பது ரேடியத்தைக் கண்டறிந்த மேரிகுயூரி, பியரிகுயூரி என்ற தம்பதிகளின் பெயர்களின் அடிப்படையில் அமைந்தது. பெர்க்கிலியம் என்பது பெர்க்கிலி என்ற நகரின் பெயரை அடிப்படையாகக் கொண்டது. பெர்க்கிலி என்ற நகர் கலிஃபோரினியா மாகாணத்திலுள்ளது.

இந்த ஆராய்ச்சியில் பெரும்பாலும் ஐரோப்பியரே ஈடுபட்டனர். ஆதலின், அவர்கள் தங்களுக்குப் பொதுவான இலத்தின் பெயரையே பல பொருட்களுக்கு இட்டனர். உலக வழக்கு மொழியிலுள்ள பெயர்களை இட்டால் அவை வேறு பிறவற்றையும் குறிக்கக் கூடுமென்று கருதியே வழக்கில் இல்லாத இலத்தீன் பெயரை இட்டனர். அப்பெயர் கிணற்றிலிட்ட கல் போல் சிறிதும் இடம் மாறாது இட்ட இடத்திலேயே கிடந்து பிறபொருளை உணர்த்துவதற்குப் போகாது. இப்பெயர்களில் முழுப்பெயராக எழுதுவது பெருவழக்கில் இல்லை.செட்டிநாட்டில் மக்களுக்குப் பெயர்கள் தலை எழுத்தினைக் கொண்டு வழங்கப் பெறுவது போலவே, இப்பொருள்களின் பெயர்களும் வழங்கப் பெறுகின்றன. பெயர்களின் முதல் எழுத்தையே அப்பெயர்களுக்கு அறிகுறியாக எழுதுவது வழக்கம். இரண்டு மூன்று பொருள்களின் பெயர்கள் ஒரே எழுத்தில் தொடங்கினால் முதல் இரண்டு எழுத்துகளை எழுதுவர். கார்பனை (கரி) ‘C’ என்றும், நைட்டிரஜனை ‘N’ என்றும் எழுதுவர். ஆனால் கால்சியத்தையும் நிக்கலையும் முறையே ‘Ca’ என்றும் ‘Ni’ என்றும் இரண்டு எழுத்துகளை அறிகுறியாக எழுதுவர். குறியீடுகள் 1,2,3,... என்ற எண் குறியீடுகளைப் போலவே உலகம் முழுவதிலும், வழங்கும் குறியீடுகளாகும். இவை எல்லா நாட்டினர்க்கும் பொதுச் சொத்து. எனவே, நாமும் இந்தக் குறியீடுகளையே வழங்குவது தக்கது.

அணுவின அமைப்பு: அணுவின் அமைப்பும் அண்டத்தின் அமைப்பும் ஒரே மாதிரி உள்ளன என்று ஆய்வுகளால் மெய்ப்பித்துள்ளனர். ‘அண்டத்தில் போலத்தான் பிண்டத்திலே’