பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-இன்று

97


என்பது நம் நாட்டில் வழங்கும் பழமொழி. இந்தப் பழமொழியும் இந்தப் பேருண்மையை விளக்கி நிற்கின்றது. அறிந்த ஒன்றைக் கொண்டுதான் அறியாத ஒன்றினை விளக்க வேண்டும் என்பது உளவியல் விதி; இயல்பும் அதுதானே. ‘அணு எப்படி உள்ளது?’ என்றால் ‘அண்டங்கள் போல’ என்போம். ‘அண்டங்கள் எப்படியோ?’ என்றால் நட்சத்திரங்கள் போல்’ என்போம். நட்சத்திரங்களின் அமைப்பு எப்படியோ? என்றால் ‘கதிரவன் குடும்பம் போல்’ என்போம். இவ்வாறு ஒவ்வொன்றினையும் விளக்க, உவமைகள் பயன்படுகின்றன. இந்த உவமைகள் யாவும் நாம் அறிந்தவைகளாகவே இருக்கும். அவை சொல்லுவோருக்கும் கேட்போருக்கும் மிகவும் நன்றாகத் தெரிந்தவைகளாகவே இருக்கும்.

கதிரவன் மண்டலத்தில் நாம் காண்பதென்ன? கதிரவன் நடுவில் அமைந்திருக்கின்றான். அவனைச் சுற்றிப் பலப்பல மண்டலங்கள் அமைந்துள்ளன. இம்மண்டலங்களில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நேப்டியூன், புளுட்டோ முதலிய கோள்கள் சுற்றிச் சுற்றி இயங்குகின்றன. இந்தக் கதிரவன் குடும்பத்தைப் போன்றே அணுவின் அமைப்பும் உள்ளது. கதிரவன் மிகப் பெரியவன்; பூமியோ அதனைவிட எவ்வளவோ சிறியது. அணுவில் எதனைச் சூரியன் எனலாம்? எதனைப் பூமி எனலாம்? என்ற வினாக்கள் எழுகின்றன.

அணுவில் பல்வேறு மின் துணுக்குகள் உள்ளன. அங்குள்ள புரோட்டானைச் சூரியன் எனலாம். அதில் 1840-இல் ஒரு பங்கிற்குச் சமமான எடையுள்ள எலக்ட்ரானைப் பூமிக்கு ஒப்பிடலாம். கதிரவனைப் பூமி சுற்றி வருதல் போல எலக்ட்ரான் புரோட்டானைச் சுற்றிவருகின்றது. புரோட்டான் (Proton) நேர்மின்னூட்டம் கொண்ட துகள். எலக்ட்ரான் (Electron) எதிர் மின்னூட்டம் கொண்ட துகள். ஆயினும், ஒன்றையொன்று கவர்வதில்லை; புரோட்டானில் எலக்ட்ரான் ஒடிப்பாய்வதில்லை. இப்படி ஒன்றினை ஒன்று கட்டித்தழுவி ஒன்றாததற்குக் காரணம் என்ன?


த--7