பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்


நியூட்ரான் வந்தால் அது மாறுவதில்லை; ஆனால் அணுவின் எடையில் மட்டிலும் மாற்றம் நிகழ்கின்றது. அணுவியல் கற்போர் இக்கருத்துகளை நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும்.

நீரிய அணுவின் அமைப்பை மேலே சுட்டினேன் அல்லவா? அதனைச் சற்று விளக்குதல் வேண்டும். நீரிய அணுவின் குறுக் களவு ஓர் அங்குலத்தில் பத்துக்கோடியில் ஒரு பங்கைக் காட்டிலும் குறைவானது. ஆனால் அணுக்கருவின் குறுக்களவு 20,000 இல் ஒரு பங்குதான். அதாவது உட்கருவின் குறுக்களவினைக் காட்டிலும் அணுவின் குறுக்களவு 20,000 மடங்கு பெரியது. எலக்ட்ரானின் குறுக்களவு அணுவின் குறுக்களவில் ஐம்பதாயிரத்தில் ஒரு பங்கு. புரோட்டானின் குறுக்களவு எலக்ட்ரானின் குறுக்களவில் இரண்டாயிரத்தில் ஒரு பங்கு எலக்ட்ரானின் பொருண்மை 9x20-27 கிராம். புரோட்டான் இதனினும் 1840 மடங்கு கனம் உள்ளது. எடையிற் பெரிய கரு எடையில் சிறிய எலக்ட்ரானைவிட பருமனில் மிகச் சிறிதாக இருப்பது ஒரு வியப்பு. அணுவின் பொருள்-திணிவு முழுவதும் அதன் உட்கருவிலேயே அடங்கிக் கிடக்கின்றது; அஃதாவது அணுவின் கரு மிக அழுத்தமாகக் கட்டுண்டு கிடக்கின்றது. இதனைச் சில எடுத்துக்காட்டுகளால் தெளிவாக்கலாம். ஓர் அணுவினைப் பெரிதாக்கி அதன் பரப்பை இருபது மீட்டர் விட்டமுள்ள வட்டத்தில் குறிப்பிட்டால், அப்பொழுது ஒரு மில்லி மீட்டரில் பத்தில் ஒரு பங்கு அளவுள்ள ஒரு மையப் புள்ளியே அதன் உட்கருவினைக் குறிக்கும். மகிமா சித்தர் ஒருவர் ஒரு துளி நீரை உலகம் அளவு பெரிதாகச் செய்ய முடியு மானால், அதிலுள்ள ஒவ்வொரு அணுவும் ஒரு மீட்டர் குறுக்களவுடையதாக இருக்கும். அப்பொழுதும் கருவின் குறுக்களவு ஒரு மில்லி மீட்டரில் நூறில் ஒரு பங்குதான் இருக்கும். அதே சித்தர் ஒரு நீரிய அணுவினை 600 மைல் குறுக்களவுள்ள (300 மைல் ஆரமுள்ள) கோளம்போல் விம்மி உப்பச் செய்தால் அதன் நடுவில் புரோட்டான் ஒரு பட்டாணி அளவு கிடக்கக் காணலாம். எலக்ட்ரானோ இதனிலும் மிகப் பெரிதாய் 30 அடி குறுக்களவுள்ள பெரிய உருண்டையாய், கோளத்தின் விளிம்பில் கிடக்கும். எனவே, அணு முழுவதும் பெரும்பாலும் காலியிடமே.