பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்


இருக்கும். இரண்டு எலக்ட்ரான்கள் இருந்தால் இரண்டு மின்னூட்டமாகும். மின்னூட்டமாவது மின்சாரம் பாயும் அளவு, எலக்ட்ரான்களின் எண்ணிக்கை வளர வளர அதன் மின்னூட்டமும் படிப் படியாக வளர்ந்து கொண்டே போகும். கோள் நிலையில் சுழன்று வரும் எலக்ட்ரான்கள் ஒன்றிலிருந்து படிப் படியாக 92 வரையிலும் உயர்ந்து கொண்டே போகின்றன. இதனால்தான் அணுக்களின் வகையும் 92 ஆயிற்று. மின்னூட்ட எண்ணிக்கையில் வேறுபாடே அணுக்கள் பல வகையாகக் காணப்படுவதற்குக் காரணமாகும்.

எலக்ட்ரான்களால் விளையும் எதிர் மின்னூட்டத்தைச் சமனிலையாக்க நேர் மின்னூட்டமும் இருக்க வேண்டுமல்லவா? எலக்ட்ரான்கள் ஒன்றிலிருந்து 92 வரை மிகுதிப்பட்டு 92 வகையான அணுக்களைப் படைத்து வருங்கால, புரோட்டானும் ஒன்றிலிருந்து 92 வரை மிக்கு வருகின்றது. இந்த புரோட்டான்கள் யாவும் அணுக்கருவில் செறிந்து அடங்குகின்றன. எனவே, அணுக்களின் பெயர்களை உருப்போட்டு நினைவில் வைத்துக் கொள்ளவேண்டியதில்லை. புரோட்டான்களின் எண்ணிக்கையைக் கொண்டே அணுக்களுக்கு 1,2,3,4 ..என நெடுக 92 வரை சென்று பெயர் இடலாம். 92 என்றால் 92 புரோட்டான்களைக் கொண்ட அணு, அதாவது யுரேனியம் எனலாம். 88 என்றால் 88 புரோட்டான்களைக் கொண்ட ரேடியம் (Radium) என்றாகும். பதினாயிரம் மக்கள் வேலை செய்யும் தொழிற்சாலைகளிலும், ஆயிரம் மாணாக்கர்கள் கற்கும் கல்லூரிகளிலும், பல நோயாளிகள் தங்கியிருக்கும் மருத்துவ நிலையங்களிலும். ஊர்க் காவலர்களைப் பெயரிடுவதிலும், கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் கம்பு, சோளம், நெல், கரும்பு வகைகளுக்கு பெயரிடுவதிலும் எண்களைக் கொண்டு வழங்குவது போன்ற முறையாகும் இது. ஆனால் அந்த எண்களை வழங்குவதற்கும் அவற்றைக் கொண்ட மக்களின் இயல்புக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. ஆனால், எண்முறை கொண்டு அணுக்களுக்குப் பெயரிடும் சடங்கில் உண்மையான தத்துவம் பொதிந்துள்ளது. குறிப்பிட்ட அணுவிற்கும் அந்த அணு கொண்டுள்ள எண்ணிக்கைக்கும் நேரான தொடர்பு உண்டு; உயிருக்கு உயிரான தொடர்பு அது. அந்த எண்தான் அந்த அணுவின் உட்கருவில் உள்ள புரோட்டானின்