பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்


எலக்ட்ரான்கள் இருக்கக்கூடும். இருப்பூர்தியில் முதல் வகுப்புப் பெட்டியில் இரண்டுபேர் உட்காருவதற்கு ஏற்றபடி வசதிகள் அமைந்திருக்கும். அந்தப் பெட்டியில் ஒருவர் ஏறிக்கொள்ளலாம்; அல்லது இருவர் உட்காரலாம். அதற்கு மேல் இருக்கக்கூடாது. மூன்றாவதாக ஒருவர் வந்தால் அவர் வேறொரு முறையில்தான் போய் ஏற வேண்டும். அணுவில் அம்முறையில் அமைந்த இரண்டாவது மண்டலத்தில், இருப்பூர்த்தியில் இரண்டாம் வகுப்புப் பெட்டியில் எட்டுபேர் இருப்பதற்கு இடம் இருப்பதைப்போலவே, எட்டு எலக்ட்ரான்கள் இருக்கக் கூடும். அதற்கு அடுத்த மூன்றாவது சுற்றிலும், சில மூன்றாம் வகுப்புப் பெட்டியிலிருப்பது போல, எட்டு எலக்ட்ரான்களுக்கு மேல் இருக்க முடியாது. ஆனால் ஏனைய சுற்றுகளிலெல்லாம் மூன்றாம் வகுப்புப் பெட்டியில் திருவிழாக்காலங்களில் அல்லது திருமணங்கள் நடைபெறும் காலங்களில், மக்கள் கணக்கிற்கு மேல் ஏறிச் செல்வதைப் போல், எட்டு எலக்ட்ரானுக்கு மேலும் இருக்கலாம்.9

இதையே இன்னொரு எடுத்துக் காட்டாலும் விளக்குவேன். திருக்கோயிலில் கருவறையில் பெருந்தெய்வம் அமர்ந்திருக்கும். அதைச் சுற்றியுள்ள சிறிதான முதல் திருச்சுற்றில் (பிராகாரத்தில்) இரண்டொரு தெய்வங்களின் திருமேனிகள் அல்லது உருவச் சிலைகள் இருக்கும். அடுத்த திருச்சுற்றிலும் அவ்வாறே இருக்கும், வெளித் திருச்சுற்றிலோ பல தெய்வங்களின் திருமேனிகள் வைக்கப் பெற்றிருப்பதைக் காணலாம். அணுவின் அமைப்பிலும் இவ்வாறே எலக்ட்ரான்கள்பல சுற்றுகளில் அமைந்துள்ளன.

இந்த எலக்ட்ரான்கள் பல வட்டங்களில் அமைந்திருக்கும். மண்டலக் கணக்கையும் விளக்குவேன். உட்கருவினுக்கு அடுத்த வட்டத்தில் 2 எலக்ட்ரான்கள் உள்ளன. இரண்டாவது வட்டம் 8 எலக்ட்ரான்களைக் கொள்ளும். மூன்றாவது வட்டமும் 8 எலக்ட்ரான்களையே கொள்ளும். நான்காவதும் ஐந்தாவதும் ஒவ்வொன்றும் 18 எலக்ட்ரான்களைக் கொள்ளும். ஆறாவதும் ஏழாவதும் ஒவ்வொன்றும் 32 எலக்ட்ரான்களைக் கொள்ளும்.


9. இன்று இருப்பூர்த்தியில் மூன்றாம் வகுப்பு இரண்டாம்

வகுப்பாகிவிட்டது.