பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-இன்று

111


விரைந்து வந்து பூமியை அடைகின்றது. அது நம்மை வந்தடைய 8 கிமிடங்கள் ஆகின்றன. பூமி வெப்பம் இழந்து சில்லிட்டுக் குளிர்ந்து உயிரற்றுப் போகாதபடி கதிரவனால் காக்கப் பெறுகின்றது. கதிரவனுடைய உட்புறத்திலுள்ள வெப்பம் சுமார் 20,000,000°F (இரண்டு கோடி) சுழியுள்ளது. அங்குள்ள அமுக்கமும் ஒரு சதுர அங்குலத்திற்கு 15,000,000 000 (நூற்றைம்பது கோடி) இராத்தல்களாக உள்ளது. இவ்வளவு வெப்பமும் அமுக்கமும் சூரியனிடம் ஒன்றாகச் சேர்ந்து இருப்பதால் சூரியனிடமிருக்கும் கோள் நிலை எலக்ட்ரான்கள் முற்றிலும் உதிர்க்கப் பெறுகின்றன. ஆயின் அவற்றின் உட்கருக்கள் மட்டிலும் தகர்ந்து போகாமல் உள்ளன. இந்த நிலையில் புரோட்டான்களும் நியூட்ரான்களும் மிகச் சிக்கலான முறையில் இணைகின்றன. அவை இணையும் பொழுது ஆற்றல் வெளிப்படுகின்றது. சூரியனிடமிருந்தும் விண்மீன்களிடமிருந்தும் ஆற்றல் வெளிப்படுவதற்கு இந்த நிலைகளும் நிகழ்ச்சிகளுமே காரணமாகின்றன. கதிரவனிடம் இரண்டு புரோட்டான்களும் இரண்டு நியூட்ரான்களும் இணைந்து பரிதிய உட்கருவை (Helium atom) இயற்றுகின்றன. இதனால் அதிகமான அளவு சூடு விடுவிக்கப் பெறுகின்றது. ஒவ்வொரு நொடியிலும் கோடானுகோடி உட்கருக்களில் இந்நிகழ்ச்சி நடந்து வருகின்றது.

ஒவ்வொரு விநாடியிலும் கதிரவனிடமிருந்து ஒன்றரை கோடியே கோடி குதிரைத் திறன் அளவு கொண்ட ஆற்றலைச் சூரியனிடமிருந்து பூமி பெறுகின்றது என்று அறிவியலார் கணக்கிட்டுள்ளனர். இதில் மூன்றில் ஒரு பகுதி கடல், ஏரி முதலிய நீர்நிலைகளிலிருந்து நீரை ஆவியாக மாற்றுவதற்குச் செலவழிக்கப் பெறுகின்றது. இவ்வாறு மேலே நீராவியாகச் செல்லும் நீர்தான் பின்னர் மலைகளின் உச்சியில் மழையாகப் பொழிகின்றது. மழை நீர் ஆறுகளாகப் பாய்வதனால் நீர் வீழ்ச்சிகள் (அருவிகள்) உண்டாகின்றன. உலகிலுள்ள எல்லா ஆறுகளிலும் ஒடுகின்ற நீரின் ஆற்றலைக் கொண்டு சுமார் முப்பத்தைந்து கோடி குதிரைத் திறன் அளவு ஆற்றலைப் பெறலாம் என்று மதிப்பிட்டுள்ளனர். முன்னைய பொழிவில் பிள்ளைப் பெருமாள் குறிப்பிட்ட 'முதுநீர்த் திகிரி' என்ற கருத்தின் விளக்கத்தை ஈண்டு நினைவுகூர வேண்டுகின்றேன்.