பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்


கதிரவன் வெப்பத்தால்தான் காற்றுகள் வீசுகின்றன; காற்றின் ஆற்றலும் குறைந்த அளவு பயன்படுகின்றது. மின்னலில் உண்டாகும் மின்சார ஆற்றலைக் கட்டுப்படுத்திப் பயன்படுத்த இன்னும் அறிவியலறிஞர்கள் வழி வகுக்கவில்லை. ஒவ்வொரு மின்னலிலும் சுமார் ஆயிரம் குதிரைத் திறன் அளவு ஆற்றல் வெளிப்படுவதாகவும், உலகின் பல பாகங்களில் விநாடி ஒன்றுக்குச் சராசரி பதினாறு மின்னல்கள் ஏற்பட்டு வருவதாகவும் மதிப்பிடப் பெற்றுள்ளது. ஆனால் தற்சமயம் மின் ஆற்றலை நீர்வீழ்ச்சிகளினின்றும் நிலக்கரியினின்றுமே பெறுகின்றனர்.இன்று அணுவில் பதுங்கிக்கிடக்கும் ஆற்றலைக் கிளப்பி விட்டு அதனை மின்னாற்றலாக மாற்றும் வழியையும் கண்டறிந்துள்ளனர். கல்பாக்கத்தில் அமைக்கப் பெற்றிருக்கும் அணு உலை (Atomic Plant) இதற்கு எடுத்துக்காட்டாகும்.

கதிரவனிடமிருந்து பெறும் ஆற்றலைத் துணைக் கொண்டே தாவரங்கள் வேதியியற் கிரியைகளை விளைவித்து சருக்கரை (Sugar), மாப்பொருள் (Starch), மரக்கூர் (Cellulose) முதலியவற்றைத் தயாரிக்கின்றன. தாவரத்தால் மட்டிலுமே கதிரவனின் ஆற்றலை விழுங்க முடியும். தாவரங்கள் ஆண்டு தோறும் பத்தாயிரம் மில்லியன் டன் மரத்தையும் (இது முழுதும் மரக்கூராலானது) நூறு மில்லியன் டன் கோதுமை, அரிசி, மாப்பொருளையுடைய உருளைக்கிழங்கு முதலிய கிழங்குவகைகளையும் தயார் செய்கின்றன. இப்பொருள்களிலுள்ள ஆற்றல் எல்லாம் வேதியியல் வடிவில் உள்ளது. இந்த ஆற்றல் இயக்க நிலையிலுள்ள ஆற்றல் அன்று. மரக்கூரிலும் மாப்பொருள்களிலுமுள்ள அணுத்திரளையின் அணுக்கள் பிணைந்திருக்கும் கொக்கிகளில் (Bonds) அடங்கிக் கிடக்கின்றது. வேதியியல் ஆற்றல் என்பது இறுக்கமாகச் சுற்றப் பெற்றுள்ள நீள்சுருளில் (Spring) அடங்கிக் கிடக்கும் மீள்சக்தி (Elasticity) யைப் போன்று சேமித்து வைக்கப் பெற்றுள்ள ஒருவகை ஆற்றலாகும். மேற்கூறிய வடிவங்களிலுள்ள ஆற்றல் எல்லாம் அமைதியாகவும் கண் காணா நிலையிலும் நீள்சுருள், எரியை, மலைமீதுள்ள பனிக்கட்டி முதலியவற்றில் சேமிக்கப் பெற்றுள்ளது. அது மனிதனுடைய வினையை (Work) ஆற்ற வல்ல இயக்கமாகவும், சூடாகவும், மின்னாற்றலாகவும் விடுவிக்கப்பெறும்.