பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-அன்று

5


 2. அறிவியலறிஞர்கள் : பன்னெடுங் காலமாகவே தமிழர்கள் நாகரிகத்தில் சிறப்புற்று விளங்கினர் என்பது வரலாற்று அறிஞர்கள் ஒப்புக் கொண்ட உண்மை. அறிவியற் கலைகள் அவர்களிடம் பயன்முறைக் கலைகளாக மிளிர்ந்தன என்பதற்குப் பல்வேறு சான்றுகள் உள்ளன. இன்று மேனாட்டார் 'சயன்ஸ்' (Science) என்ற பெயரால் குறிப்பதைத் தான் நாம் 'அறிவியல்’ என வழங்குகின்றோம். 'சயன்ஸ்' என்ற சொல் 'அறிவு' எனப் பொருள்படும் கிரேக்கச் சொல்லினின்றும் தோன்றியது; மனிதன் வாழும் சூழ்நிலை, சுற்றியுள்ள உலகம், பிற அண்டங்கள் முதலியவற்றின் தன்மைகளைத்தான் அறிவியற்கலைகள் உணர்த்துகின்றன. பண்டைத் தமிழர்கள் இன்றிருப்பது போன்ற அறிவியல் துறைகளைத் தனித்தனி கலைகளாக வளர்த்து வைத்திருந்தனர் என்பதற்குத் தக்க சான்றுகள் இல்லாது போயினும் அக்கலைகளைப் பற்றி ஒரளவு அறிந்திருந்தனர். அவை அவர்கள் வாழ்வில் பயன்முறை அறிவியல் துறைகளாக (Applied Sciences) மிளிர்ந்தன என்பதற்குப் பல்வேறு சான்றுகள் உள. அவற்றுள் இலக்கியச் சான்றும் ஒன்று. இதனை இன்றைய பொழிவில் ஓரளவு ஆாாய்ந்து காணா முயல்வேன்.

வான இயல், வானியல், கோளியல், பொறியியல் முதலிய பல்வேறு துறைகளிலும் அவர்கள் வல்லுநர்களாகத் திகழ்ந்தனர் என்பதற்குப் பல இலக்கியச் சான்றுகள் உள. என்ன காரணத்தாலோ அவர்கள் இன்றுள்ளது போல் அத்துறைகளை வரையறை செய்து பாதுகாக்கவில்லை. ஒருகால் அவ்வாறு வரையறுத்து வைத்திருக்கவும் கூடும்; அவை அழிந்துபட்டனவோ என்னவோ யாம் அறியக் கூடவில்லை. ஆனால் அவர்கள் அத்துறைகளில் அறிவுடையவராயிருந்தனர் என்பது மட்டிலும் ஒருதலை.

உறையூர் முதுக்கண்ணன் சாத்தனார் என்ற புலவர் பண்டைக் காலத்தில் அறிவியல் அறிஞர்கள் இருந்தனர் என்பதை,

செஞ்ஞா யிற்றுச் செலவுமஞ் ஞாயிற்றுப்

பரிப்பும் பரிப்புச் சூழ்ந்தமண் டிலமும்