பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-இன்று

117


பெரும்பாலும் ஆற்றல் சூடாகவே வெளிப்படுகின்றது. இச்சூடு கண்ணுக்குத் தெரியாத கதிர்களாக வெளிபடுகின்றது. ஆல்ஃபா-கதிர்கள், பீட்டா-கதிர்கள், காமா - கதிர்கள் என்ற மூன்று வித கதிர்கள் வெவ்வேறு தீவிரத்தில் வெளி வருகின்றன. இவை பேராற்றல் வாய்ந்தவை; அபாயகரமானவை; உடலுக்குப் பெருங்கேட்டை விளைவிக்கக் கூடியவை.

இரண்டாவது பண்பு அதன் அரை-வாழ்வு. இது முக்கிய பண்பாகவும் உள்ளது.இப்பண்பினால் கதிரியக்க ஐசோடோப்புகள் ஒரு மாறாத வேகத்தில் சிதைந் தழிந்து இறுதியில் கதிரியக்கத் தன்மையையே இழந்து விடுகின்றன. இச்செயல் முழுவதும் தானாகவே நடைபெறுகின்றது; எந்தவித இயந்திர உக்தியைக் கொண்டும் அதனை மிகுதிப்படுத்தவும் முடியாது; குறைவாக்கவும் முடியாது. இவ்வாறு சிதைந்தழியும் தன்மை (வேகம்) எந்த ஒரு தனிமத்திற்கும் ஒரே அளவாகத்தான் இருக்கும். அரை-வாழ்வு என்பது என்ன? ஒரு குறிப்பிட்ட அளவுள்ள தனிமம் அது பாதியாவதற்கு எடுத்துக் கொள்ளும் காலத்தை அரை-வாழ்வு என வழங்குவர் அறிவியலறிஞர்கள். எடுத்துக் காட்டாக ஒரு கிராம் எடை ரேடியம் அரை கிராம் எடை ரேடியமாகச் சிதைந்தழிவதற்கு 1600 ஆண்டுகளாகின்றன. எனவே ரேடியத்தின் அரை-வாழ்வு 1600 ஆண்டுகள் இவ்வாறு யுரேனியத்திடன் அரை-வாழ்வு 4000 மில்லியன் ஆண்டுகள். போலோனியத்தின் அரை-வாழ்வு 136 நாட்கள்.

செயற்கை முறையில் எண்ணற்ற கதிரியக்க ஐசோடோப்புகள் உண்டாக்கப் பெறுகின்றன. இவற்றின் அரை-வாழ்வு மணி, நாள் கணக்கில் இருக்குமாறும் தயாரிக்கப் பெறுகின்றன. நமக்குத் தேவையான வேதியியற் சேர்க்கைப் பொருள் (Chemical compounds) களைக் குழல்வடிவத் திறப்பு வழியாக (Tubular 0ri fice )ஒரு குறிப்பிட்டகால அளவு (சில மணி நேரம்) நியூட்ரானின் தாக்குதலுக்கு உட்படுத்தினால் நாம் விரும்பும் கதிரியக்க ஐசோடோப்பைப் பெறமுடிகின்றது. இவை பல்வேறு முறைகளில் பயன்படுகின்றன. -

4. மருத்துவத் துறையில்

செயற்கைக் கதிரியக்கம் கண்டறியப் பெற்ற பிறகு மருத்துவத்துறையில் வியத்தகு மாற்றம் ஏற்பட்டு விட்டது.