பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்


செயற்கை முறையில் உண்டாக்கப் பெற்ற கதிரியக்க ஐசோடோப்புகளின் அரை-வாழ்வு சில வினாடிகளிலிருந்து பல்லாயிரம் ஆண்டுகள் வரையில் அமைந்துள்ளது. குறைந்த அரை-வாழ்வு உள்ள ஐசோடோப்புகள் முதலில் தீவிரமான கதிரியக்கமுடையவாயுள்ளன; ஒன்றிரண்டு மணி நேரத்தில் அதன் கதிரியக்கப் பண்பு பெரும்பாலும் இழக்கப் பட்டுவிடுகின்றது; மூன்று நான்கு நாட்களுக்குப் பிறகு அதன் பெரும்பகுதி இல்லாது போகின்றது; எஞ்சியுள்ள மிகவும் சிறிய பகுதி சில ஆண்டுகளில் மறைகினறது. எனவே இத்தகைய கதிரியக்க ஐசோடோப்புகளைப் பயன்படுத்தி நமக்குத் தேவையான அளவு கதிர்களைப் பெறலாம். இந்தப் பெரிய துறையில் ஒரு சில நோய்களைச் சுட்டி அவை சிகிச்சை செய்யப்படும் ஐசோடோப்புகளையும் விளக்குவேன்.

1.புற்று கோய்: இன்று புற்று நோய், சிகிச்சையில் கதிரியக்கச் சோடியம், கோபால்ட்டு-60 செசியம்-137 போன்ற பொருள்கள் பயன்படுகின்றன. கதிரியக்கச் சோடியத்தைப் புற்று நோய் உள்ள இடத்தில் வைத்துவிட்டால் அது விரைவான பீட்டா-கதிர்களை வெளிவிட்டுப் புற்றை அழிக்கின்றது; புற்றை விளைவிக்கும் கிருமிகள் மடிந்து விடுகின்றன. இது விரைவில் தன் கதிரியக்க இயல்பை இழந்துவிடுவதால் இச்சிகிச்சை ரேடியத்தைப் போல் வரம்பு கடந்து சென்று அபாயகரமான கோளாறுகளை விளைவிக்க வழி இல்லை. கதிரியக்க சோடியத்தின் அரை-வாழ்வு பதினைந்து மணி நேரம்; ரேடியத்தின் அரை-வாழ்வு 1600 ஆண்டுகள் என்பது நமக்குத் தெரியும். ஆனால் இந்த செயற்கைப் பொருள் சம எடையுள்ள ரேடியத்தை விடப் பத்து இலட்சம் மடங்கு அதிகக் கிளர்ச்சியுள்ளது எனக் கணக்கிடப் பெற்றுள்ளது. அன்றியும் சோடியத்திலிருந்து தோன்றும் மக்னீஷியம் என்னும் தனிமமும் உடலில் எளிதில் கலந்து விடும். மக்னீஷிய உப்பு உடலுக்குக் கெடுதி செய்வதில்லை. எனவே, சிகிச்சை முடிந்த பிறகு இதை, உடலிலிருந்து வெளியே அகற்றவும் தேவை இல்லை.

கதிரியக்கக் கோபால்ட்டு-60ஐகேபொல்ட்டு குண்டு' என்று முதலில் வழங்கினர். இதைக் கொண்டு சிகிச்சை செய்யும் முறை சிக்கலானது; நன்மையும் தீமையும் விளைவிக்கவல்லது.