பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்- இன்று

119


விவரம் என் நூலில் கண்டு கொள்ளவேண்டுகிறேன்11 செசியம்-137-உம் கோபால்ட்டு குண்டைப்போலவே பயனளிக்க வல்லது. இது காமா கதிர்களை வெளிவிடும் பொருள். கதிரியப் பொன்னும் புற்று நோய் சிகிச்சையில் பயன்படுகின்றது.உடலின் குழிகளிலுள்ள புற்று நோய் இழையங்கள் அடிக்கடி அதிகமான பாய்மங்களை உற்பத்தி செய்கின்றன. இந்தக் குழிகளில் கதிரியக்கப் பொன்னைக் குத்திப் புகுத்திவிட்டால் அது புற்று நோய் அணுகள் வளராதிருக்கத் தடை செய்கின்றது; அன்றியும், குழியின் அனைச்சவ்விலுள்ள உயிரணுக்களின் சுரக்கும் செயலையும் குறைத்து விடுகின்றது. உடலில் மிக ஆழத்தில் வளரும் கழலையைக் குணப்படுத்தக் கதிரியக்கப் பொன் பயன்படுத்தப் பெறுகின்றது.

2. தொண்டைக் கழலைநோய் : நமது உடலில் பல பகுதிகளில் துாம்பிலாச் சுரப்பிகள் (Ductless glands) உள்ளன. இவற்றில் ஊறும் ஹார்மோன்கள் என்ற வேதியியற் சாறுகள் நமது உடலில் நிகழும் பலவித உயிரியல் விளைவுகளைக் கட்டுப்படுத்துகின்றன. நமது கண்டத்திலுள்ள சுரப்பியின் பெயர் 'தைராய்டு' என்பது. இதனைப் புரசைச்சுரப்பி என்றும் வழங்குவர். இது செயற்படுவதில் கோளாறு நேர்ந்தால் உடல் நலம் பல்வேறு விதங்களில் கெடும். இதில் அயோடின் என்ற வேதியியற்பொருள் அதிகம் உள்ளது. இச்சுரப்பியல் நேரிடும் கோளாறினைப் போக்கக் கதிரியக்க அயோடின் பயன்படுகின்றது. ஒருவருடைய புரிசைச் சுரப்பி மிகக்கேடான நிலைக்கு உள்ளாகி இருப்பதாக வைத்துக் கொள்வோம். அவருக்கு அயோடின்-131 தரப் பெறுகின்றது. அஃது ஊசி மூலம் உடலில் குத்திப் புகுத்தப் பெறுகின்றது. உள்ளே சென்ற அயோடின் ஐசோடோப்புகள் காக்கைக் கூட்டில் வாழும் குயில் குஞ்சுகளைப்போல் புரிசைச் சுரப்பியில் செறிந்து திரளுகின்றன. அவை வீசும் பீட்டா-கதிர்கள் புரிசைச்சுரப்பியிலுள்ள சில இழையங்களை அழிக்கின்றன. அயோடினைப் பெற்ற மனிதனின் புரிசைச் சுரப்பி மட்டுக்கு மிஞ்சிய சுறுசுறுப்புடையதாக இருக்கலாம். அதனை 'ஹைப்பர் தைராடிஸ்ம்' என வழங்குவர். அந்நிலையில் தொண்டைப்புறம் வீங்கிக் கண்டத்தில் பெரிய கழலை உள்ளது போல் தோன்றும்.


11. அணுவின் ஆக்கம்-பக் 212-213