பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-இன்று

121


கள் சாதாரணமாகப் பல ஆண்டுகள் நலமாக வாழலாம். ஆயினும் இறுதியில் நோயாளி இந்நோய்க்குப் பலியாக வேண்டியதுதான். இந்நோயின் பல்வேறு வடிவங்கள் ஆண் பெண் ஆகிய இருபாலாரிடையேயும் எல்லா வயதுப் பருவங்களிலும் உண்டாகின்றன; என்றாலும், பெரும்பாலும் 35-55 வயதுக்காலங்களில்தான் அதிகமாகக் காணப்படுகின்றன. இந்நோயைப் போக்குவதற்கு பாஸ்வரம்-32 தான் பயன்படுகின்றது.

5. அழுகுப் புண்: இது அறுவை மருத்துவர் அடிக்கடி காணும் ஒரு நோய். இந்நோய் குருதியோட்டக் குறைவால் ஏற்படலாம்; இஃது ஏற்படுவதற்குப் பிற காரணங்களும் உள. இந்தப் புண் ஏற்பட்டால் அழுகிப் போன பகுதியை உடலிலிருந்து வெட்டியெறிவது அவசியம். ஆனால் சிறந்த அறுவை சிகிச்சை வல்லுநர்கூட எந்த இடத்தில் வெட்டுவது என்பதை மிகத் துல்லியமாக அறுதியிடுவது சிரமம். இதை அறுதியிடுவதற்குக் கதிரியக்க ஐசோடோப்புகள் பெரிதும் துணைபுரிகின்றன. சோற்றுப்பினை சுழலினி (Cyclotron) என்ற பொறியிலிட்டு உப்பிலுள்ள சோடியத்தைக் கதிரியக்கக் கிளர்ச்சியுடையதாகச் செய்து இதற்குப் பயன்படுத்துக்கின்றனர். இந்தச் சோடியம் பெற்ற கிளர்ச்சி சில மணி நேரம்தான் நீடித்திருக்கும். இந்தக் கதிரியக்க உப்பினை சிறிதளவு சோற்றுப்புடன் கலந்து உணவுடன் சேர்த்து உண்டால் சோற்றுப்புடன் கதிரியக்க உப்பும் சென்று குருதியில் கலந்துவிடும். உடலில் குருதி ஓடிவரும் இடமெங்கும் இந்த உப்பும் கூடவே செல்லும். அங்கெல்லாம் இதன் அணுக்கள் வெடித்து காமா-கதிர்களை வீசும். அழுகின உறுப்பின் அருகே கைகர்-எண் கருவியைக் கொண்டு சோதித்தால் எந்த இடத்தில் குருதியோட்டம் தடைப்பட்டு நின்றுள்ளது என்று துல்லியமாக அறுதியிட முடியும்; அந்த இடத்திலிருந்து அழுகிய பகுதியை நீக்கிவிடலாம்.

6. மூளைப்பிளவை (Brain tumour): கதிரியக்கப் பாஸ்வரமும் அறுவை சிகிச்சையில் சிறந்த குறையறி கருவியாக (Diagnostic tool) பயன்படுகின்றது. மூளையில் ஏற்பட்டிருக்கும் சில வகைப் பிளவைகளின் இருப்பிடத்தைக் கண்டறிய இக்கதிரியக்கப் பொருள் பயன்படுத்தப் பெறுகின்றது. மூளையின்