பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்


இழையங்கள் உட்கிரகிக்கும் பாஸ்வர அளவை விட இப்பிளவைகள் அதிகமான பாஸ்வரத்தை உட்கிரகிக்கின்றன; பாஸ்வர மருந்துடன் இக்கதிரியக்கப் பாஸ்வரத்தைக் கலந்துநோயாளியின் பாய்குழல் (Vein) வழியாக ஊசி மூலம் குத்திப் புகுத்தப் பெற்றால் அது மூளையில் செறிந்து திரளுகின்றது. ஊசி போன்ற கைகர்-எண் கருவியைக் கொண்டு மருத்துவர் கழலையின் இருப்பிடத்தைத் தேடுங்கால், சில ஒளிகள் சற்று மெதுவாகவும் ஒரே நிதானமாகவும் அணைந்து எரியும். கழலையுள்ள இடத்தில் திடீரென ஒலிகள் மிகவும் விரைவாக அணைந்து எரியும். இந்த இடம்தான் கழலையின் இருப்பிடம். வெளிவிடப் பெறும் கதிரியக்கக் கிளர்ச்சி கால்அங்குல இழையத்தை மட்டிலும் துளைத்துச் செல்லக் கூடியதாதலின் ஊசி போன்ற சலாகையொன்றினை (Probe) மூளையில் செருகி அத்துடன் பிரத்தியேகமான கைகர்-எண் கருவியொன்றினை இணைத்து கதிரியக்கக் கிளர்ச்சியினை அறிந்து கொள்ளலாம். இதனால் பிளவையின் இருப்பிடத்தை அறிந்து கொள்ள முடிகின்றது.

நோய்களைத் தீர்ப்பதற்குக் கதிரியக்கப் பொருள்களைப் பயன்படுத்தும் முறைகள் பல்கிப்பெருகிக் கொண்டு வருகின்றன. இப்பொருள்களின் விலையும் மலிவாகிக் கொண்டு வருகின்றது. பாலுண்ணிகளை அழிப்பதிலும் எச்சில் தமும்பு போன்ற, தோல்பற்றிய நோய்களைக் குணப்படுத்துவதிலும் இப்பொருள்கள் பெரிதும் பயன்படுகின்றன. சிறிது நேரமே நீடித்து நிற்கக் கூடிய கதிரியக்கக் கிளர்ச்சிப் பொருள்களை பிளாஸ்திரியாக ஒட்டவோ தடவும் மருந்தாக வைத்துக் கட்டவோ செய்யலாம். இங்ஙனம் கதிரியக்க ஐசோடோப்புகள் மருத்துவத்துறையில் பெரும் புரட்சி செய்துள்ளன; இன்னும் எதிர்காலத்தில் எண்ணற்ற நற்பயன்களை விளைவிக்கக் காத்திருக்கின்றன.

5. வேளாண்மையியலில்

கதிரியக்க ஐசோடோப்புகளின் பங்கு இத்துறையில் பெரும் பங்கு கொண்டுள்ளது. இதனை ஈண்டு விளக்குவேன்.

1. உரமிடுதல் ஆராய்ச்சி: அண்மைக் காலம் வரை யிலும் தாவரங்களின் வளர்ச்சி, பருமன், இவை தரும் பலன் ஆகியவற்றைக் கொண்டே உரமிடுதலின் விளைவுகளை மக்கள்