பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-இன்று

129


தோற்றம் ஒரு விண்மீனின் தோற்றம் போலாகி விடும். வான வெளியில் காணப்பெறும் கோடானு கோடி அண்டங்களில் கதிரவனும் ஒன்றேயன்றோ? இந்த எல்லையற்ற விண்வெளி ஒரு மாபெருங் கடலைப் போன்றது என்றும், அக்கடலில் தோன்றும் உலகங்களின் தொகையும் கணக்கற்றது என்றும் சொல்லுகின்றனர்.

தம்முடைய அச்சில் சுழன்று கொண்டும் விண்வெளியில் மிதந்து கொண்டும் உள்ள இந்த உலகங்களுக்கிடையேயுள்ள தூரங்களைக் க ற் ப னை யி லு ம் காண முடியாது! ஒவ்வொரு விண்மீன் மண்டலமும் ஒவ்வோர் அகிலமாகும். ஒவ்வொரு விண்மீன் குடும்பத்திலும் ஆயிரமாயிர இலட்ச விண்மீன்கள் அடங்கிக் கிடக்கின்றன. அவற்றிடையே தூரங்கள் மிகப் பெரியவை. வினாடி ஒன்றுக்கு 300,000ஆயிரம் கி. மீ. வேகம் செல்லும் ஓர் ஒளிக் கதிர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பக்கத்திலுள்ள ஒருலகத்தினின்றும் அதே குடும்பத்தைச் சேர்ந்த அதற்கு எதிர்ப்புறத்திலுள்ள மற்றோர் உலகினை அடைவதற்குப் பன்னூறு ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்றால் அந்தத் தூரங்களை எண்ணிப் பாருங்கள்!

இந்த எல்லையற்ற விண்வெளியில் நமது கதிரவன் ஒரு சாதாரண விண்மீனேயாகும். அஃது இந்த எண்ணற்ற விண்மீன் குடும்பங்கள் உள்ள வெளிப்பரப்பில் ஓர் ஒரத்தில் மிதந்து கொண்டுள்ளது. எல்லா விதத்திலும் அஃது ஒரு சராசரி விண்மீன்தான். நம் கதிரவனைவிடக் குறுக்களவில் பல்லாயிரக் கணக்கான மடங்கு பெரிய விண்மீன்களும் உள்ளன; பன்னூற்றுக் கணக்கான மடங்கு சிறிய விண்மீன்களும் உள்ளன, அங்ஙனமே நம்பகலோன் எண்ணற்ற, விண்மீன்களை விடத் தண்மையாகவும் உள்ளது; வேறு எண்ணற்றவைகளை விட வெப்பமாகவும் உள்ளது.

எண்ணற்ற விண்மீன்களைப் போலவே நம் ஞாயிறும் விண்வெளியில் தனியாக உலவவில்லை. அது பல உலகங்கள் அடங்கிய ஒரு மாபெரும் குடும்பம் ஆகும். அக்குடும்பம், 'ஞாயிற்றுக் குடும்பம்’ (Solar System) என்று வழங்கப் பெறும்.

த-9