பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

தமிழில் அறிவியல் -அன்றும் இன்றும்


இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த எல்லா உலகங்களும் பிரித்தற்கில்லாத நிலையில் பிணைக்கப் பெற்றுள்ளன. பல்வேறு விண் மீன்களுக்கிடையேயுள்ள தூரங்களுடன் ஒப்பிட்டால் ஞாயிற்றுக் குடும்பத்தைச் சேர்ந்த உலகுகள் மிக அண்மையிலேயே இருப்பதாகக் கொள்ளலாம்.

ஞாயிற்று குடும்பத்தைச் சேர்ந்த உலகுகள் யாவும் கோள்களே (Planets); அவை யாவும் வெப்பமுடையவை அல்ல. அவை திண்ணிய குளிர்ந்த உலகுகள் ஆகும். அவை யாவும் பகலவனை விட மிகவும் சிறியவை; அவை விரைவாகவும் இயங்கக் கூடியவை. இந்தக் கோள்களுள் ஒன்று நாம் வாழும் பூமி. எனவே, இந்த அகிலத்தின் மையமாக இருப்பது ஒன்பது கோள்களுள் ஒன்றானதும் சாதாரண கோளும் ஆன பூமி ஒன்று. இந்த மெய்ம்மையை நன்கு அறிந்த காப்பானிகஸ், கலிலியோ, பிருனோ போன்ற அறிஞர்கள்மீது மாதாக்கோயிலின் ஆட்சி போர் தொடுத்தது. இவர்கள் யாவரும் இந்த அகிலத்தைச் சேர்ந்த பூமிக்கும் அதில் வாழும் மனிதனுக்கும் சிறப்பான இடத்தை அளிக்க மறுத்ததால் அந்த ஆட்சியால் கடுந்தண்டனை அடைந்தனர். அறிவியல் வளராத அந்தக் காலத்தில் சமய ஆக்கிரமிப்பு அதிகமாக இருந்த பொழுது நடைபெற்ற நிகழ்ச்சியே இது.

ஞாயிற்றுக் குடும்பத்தில் பூமிக்கு மிக நெருங்கிய உறவினர்கள் போல் இருக்கும் கோள்கள் யாவை? கதிரவனுக்கு மிக அண்மையிலிருப்பது புதன்; இக்கோள் ஏனைய எல்லாவற்றிலும் மிகச் சிறியது. அடுத்து, கதிரவனுக்கு அப்பால் நகர்ந்து கொண்டே செல்வோமாயின், வெள்ளி, நாம் வாழும் பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் (நிருதி), நெப்டியூன் (வருணன்), புளுட்டோ (குபேரன்) என்ற வரிசையில் இக்கோள்களைக் காண்போம். செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையில் சுமார் ஐம்பதினாயிரம் கோள்கள் அடங்கிய சிறு கோளத்திரள்கள் (Asteroids) சுற்றி வருகின்றன. ஒரு காலத்தில் இவ்விரு கோள்கட்கும் இடையிலிருந்த ஒரு பெருங்கோள் யாதோ ஒரு காரணத்தால் வெடித்துப் பன்னூறு துண்டுகளாகச் சிதறுண்டிருக்கலாம் என்று வான இயலார் கருதுகின்றனர்.