பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்- அன்று

7


3. வான இயல் (Astronomy) : பண்டையோர் வான இயல் துறையில் அறிவுமிக்கு விளங்கினர் என்பதைப் புறநானூறு போன்ற சங்க இலக்கியங்களால் அறியலாம். விண்ணில் மதி செல்லும் வழியாகிய வட்டத்தை இருபத்தேழு பிரிவுகளாகப் பிரித்து அப்பிரிவுகளை அறிந்து கொள்ளும் அடையாளமாக,

"எறிகடல் ஏழின் மணல்அள வாக"6

உள்ள விண்மீன்களில் இருபத்தேழு விண்மீன்களைக் குறித்து அமைத்தனர் பண்டைய அறிஞர்கள்.

'மதிசேர் நாள்மீன் போல்’7

என்ற புறப்பாட்டடிக்கு அப்பாட்டின் உரையாசிரியர் "திங்களைச் சேர்ந்த நாளாகிய மீனையொப்ப" என்று கூறும் உரையாலும் இதனை அறியலாம். யாக்கை நிலையாமையை விளக்க வந்த வள்ளுவப் பெருந்தகை,

நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்
வாளது உணர்வாற் பெறின்8

என்று கூறுவர். ஈண்டு நாளை ஒருவரது வாழ்நாளை இடைவிடாது ஈரும் வாள் என்று உருவகித்துக் காட்டுவர். இதற்கு உரைகண்ட பரிமேலழகர், "காலம் என்னும் அருவப் பொருள் உலகியல் நடத்தற் பொருட்டு ஆதித்தன்முதலிய அளவைகளால் கூறுபட்டதாக வழங்கப்படுவதல்லது தானாகக் கூறு படாமையின்..." என்று கூறுவதால் விண்வெளியில் இயங்கும் சூரியன், சந்திரன், பூமி முதலியவற்றால் காலம் என்னும்அருவப்பொருள் கூறுபடுத்திக் காட்டப் பெறுகின்றது என்பதை அறியலாம்.

வைணவ தத்துவம் காலத்தைச் 'சத்துவ சூனியம்' என்று குறிப்பிடும். இதுவே காலதத்துவம் ஆகும். காலம் என்பது



6. திருமந்திரம்-2297

7. புறம்-160

8. குறள்- 334


6. திருமந்திரம்-2297

7. புறம்-160

8. குறள்- 334