பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-இன்று

147


திங்கள் மண்டிலத்தை நெருங்கிச் சில அடிப்படையான தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும். இப்பயணத்தில் மூன்று விண்வெளி வீரர்கள் சந்திரனுக்கு எழுபது மைல் வரை (112 கி.மீ) அருகில் சென்று சந்திரனின் மேற்பரப்பைப் பல படங்கள் எடுத்தனர்.

எதிர்காலத்தில் மனிதன் அம்புலியில் இறங்கும் பயணத்தில் எத்தகைய இராக்கெட்டு பயன்படுத்தப் பெறுமோ அத்தகைய இராக்கெட்டே இப்பயணத்தில் பயன்படுத்தப் பெற்றது. ஆனால் அம்புலி ஊர்தி (Lunar module) என்ற ஒரு பகுதி மட்டிலும் இதில் பொருத்தப்பெறவில்லை. இந்த அம்புலி ஊர்திதான் அம்புலியைச் சுற்றி வரும் மனிதனை அம்புலிக்குக் கொண்டு செல்லும்.

அப்போலோ வீரர்கள் பத்துத் தடவை அம்புலியைச் சுற்றினர். அப்போது திங்களைப் பலமுறை படங்கள் எடுத்தனர்; வேறு தகவல்களையும் திரட்டினர். இப்பயணத்திற்கு ஆன மொத்த நேரம் 147 மணி ஆகும்.

அப்போலோ-9: இந்தப் பயணம் பூமியின் சுற்றுவழியில் மேற்கொள்ளப் பெற்ற பத்துநாள் பயணம் ஆகும். ஐம்பது டன் எடையுள்ள இந்த விண்கலம் முழுவதையும் முதல் தடவையாக விண்வெளியில் சோதிப்பதே இப்பயணத்தின் நோக்கமாகும். தாய்க் கலத்திலிருந்து திங்களில் இறங்கும் அம்புலி ஊர்தி'யாகிய சேய்க்கலத்தைத் தனியே பிரித்துச் சென்று மீண்டும் அதனைக் கொண்டு வந்து தாய்க் கலத்துடன் இணைக்கும் செயல் முதன் முதலாக இப்பயணத்தில்தான் மேற்கொள்ளப் பெற்றது. இச்சோதனை பயணத்தின் ஐந்தாம் நாள் நடைபெற்றது.

இந்தப் பயணத்தில் அம்புலி ஊர்தியைப் பிரிப்பதும் இணைப்பதுமாகிய சோதனை 6 மணி நேரம் நடைபெற்றது; ஆனால், திங்களில் இறங்கும் பொழுது செய்யப்பெறவேண்டிவற்றையே இச்சோதனையிலும் செய்து பார்த்தனர். அடுத்து நிகழவிருக்கும் அப்போலோ பயணத்தில் திங்களை நோக்கிப் போகும் விண்வெளிக் கலத்திலும் இது போன்ற அம்புலி ஊர்தியே இருக்கும்; அக்கலம் திங்களைச் சுற்றி வருகையில் அம்புலி ஊர்தியை அதினின்றும் பிரித்துத் திங்களின் தரையில்