பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-இன்று

149


சோதனை மிகவும் இன்றியமையாதது. அப்போலோ-8 பயணத்தில் கட்டளைப் பகுதியும் பணிப்பகுதியும் கொண்ட தாய்க்கலம் மட்டிலுமே சந்திரனின் சுற்று வழியில் இயங்கியது. இந்தப் பயணத்தில் அம்புலி ஊர்தி என்ற பகுதியும் தாய்க்கலத்துடன் சேர்ந்து இயங்கியது. அடுத்த பயணத்தில் திங்களில் இறங்கும் பகுதியாகி அமைதிக்கடல் (Sea of Tranquility) இரு முறை அண்மையிலிருந்து சோதிக்கப் பெற்றது. அந்த இடம் சமமட்டமாக இருப்பதும் உறுதி செய்யப்பெற்றது. மேலும், திங்களின் சூழலில் அம்புலி ஊர்தி சரியாக இயங்கும் என்பதும் நிலை நாட்டப் பெற்றது.

அப்போலோ-11: இப்பயணத்தின்பொழுதுதான் மனிதன் சந்திரனில் அடியெடுத்து வைத்தான். மயிர்க்கூச்செறியக் கூடிய இந்த மாபெரும் பயணத்தைச் சற்று விரிவாக விளக்குவது பொருத்தமானதாகும்.இந்தப் பயணத்தில் நீல் ஏ. ஆர்ம்ஸ்ட்ராங் எட்வின் அல்டிசின், மைக்கேல் காலின்ஸ் என்ற மூவர் பங்கு கொண்டனர். ஆர்ம்ஸ்ட்ராங் என்பவரே குழுவின் தலைவர். இந்த மூவரிடமும் சில ஒற்றுமைகள் இருந்தமை குறிப்பிடத்தக்கது; மூவரும் 1930 இல் பிறந்தவர்கள்! மூவரும் 75 கி கி. எடையுள்ளவர்கள்! இருவரின் உயரம் 178 செ.மீ. மற்றொருவரின் உயரம் 175 செ.மீ மூவரும் திருமணம் ஆகி மக்கட் பேறு பெற்றவர்கள்! மூவரும் விமானம் கடவுவதில் நல்ல அநுபவம் உடையவர்கள்; நாலாயிரம் மணி நேரத்திற்குக் குறையாமல் விண்வெளியில் பறந்தவர்கள். மூவருமே முன்பு நடைபெற்ற விண்வெளிப் பயணங்களின்போது ஒவ்வொரு முறை பங்கு பெற்றவர்கள்.

இதிலும் சாட்டர்ன்-5 என்ற மூன்றடுக்கு இராக்கெட்டே பயன்படுத்தப் பெற்றது. இஃது ஒன்றன்மீது ஒன்றாகப் பொருத்தப் பெற்ற இராக்கெட்டாகும். இதன் முதல் அடுக்கில் மட்டிலும் 1600 டன் திரவ உயிரியமும் 650 டன் மண்ணெண்ணையும் பயன்பட்டன. இரண்டாவது பகுதியில் மேற்குறிப்பிட்டவை தவிர தனியே திரவ நீரியமும் திரவ உயிரியமும் கலந்த எரி பொருள் நிரப்பப் பெற்றது. இந்த எரி பொருளின் எடை இராக்கெட்டின் மொத்த எடையில் 92 சதவிகிதம் ஆகும். இராக்கெட்டில் இந்த எரிபொருள்கள் நிரப்பியிருக்கும் தொட்டி-