பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்


கள் இதுகாறும் மனிதனால் உருவாக்கப் பெறாத சிறப்பியல்புகள் வாய்ந்தவை. இவை யாவும் காற்றுப் புகாத அறைகள்; அணுவளவும் ஒழுகாதவை. இச்சிறப்பியல்பை விளக்க ஓர் எடுத்துக் காட்டு. இத்தொட்டி ஒன்றில் பனிக்கட்டியை நிரப்பி அத்தொட்டியை 71oF வெப்பநிலையில் வைத்தால் அப்பனிக்கட்டி உருக எட்டரை ஆண்டுகள் ஆகும்! இதன் மூன்றாவது பகுதியின் உச்சியில்தான் கட்டளைப் பகுதி, பணிப்பகுதி, அம்புலி ஊர்தி என்ற மூன்று பகுதிகளைக் கொண்ட அப்போலோ-1 1 என்ற விண்கலம் பொருத்தப்பெற்றிருந்தது. இந்த மூன்று பகுதிகளும் சேர்ந்த அமைப்பின் உயரம் 17-55 மீட்டராகும்.இதனைத் தாங்கியுள்ள மாபெரும் இராக்கெட்டினை செலுத்துவதற்குத் தனிப்பட்ட இராக்கெட்டு தளம் (Launching pad) கென்னடி முனையில் உள்ளது. அங்கு நிறுவப்பெற்றிருக்கும் அம்புலி நிலையம் (Moon Port) 157.5 மீட்டர் உயரமுள்ள கட்டடமாகும். இது சாட்டர்ன் இராக்கெட்டை இணைத்துத் தயாரிக்கும் இடமாக இருந்து பயன்படுகின்றது.

இந்த விண்வெளிக் கலமும் இராக்கெட்டும் கென்னடி முனையின் தளத்தில் நின்றபொழுது அதன் உயரம் 36 மாடிக் கட்டடத்தின் உயரத்திற்குச் சமமாக இருந்தது! இரண்டாயிரம் பெரிய கார்களின் எடை! 543 ஜெட் போர் விமானங்கள் பறக்கும் பொழுது உருவாகக் கூடிய ஆற்றலை இந்த இராக்கெட்டு பெற்றிருந்தது. இந்த ஆற்றலைக் கொண்டு ஒரு மோட்டார் காரை 96 கி.மீ. வேகத்தில் 34 ஆண்டுகள் ஒட்ட முடியும்.

அப்போலோ-11 விண்வெளிக் கலத்தை உச்சியில் தாங்கிக் கொண்டு விண்ணில் கிளம்பிய 3,817 டன் எடையுள்ள இராக்கெட்டு வினாடிக்கு 15 டன் எரிபொருளை ஏப்பமிட்ட வண்ணம் எரிமலை கக்குவது போன்ற சுவாலையைப் பீறிட்டுக் கொண்டு மெதுவாக விண்ணை நோக்கிச் சென்றது; படிப்படியாகத் தன் வேகத்தை அதிகரித்துக் கொண்டு இரண்டரை நிமிடங்களில் 144 கி. மீ. உயரத்தை அடைந்தது. இப்பொழுது முதல்நிலைப் பகுதி கழன்றுகொண்டு இரண்டாவது பகுதி இயங்கத் தொடங்கியது. இது விண்கலத்தை மேலும் உயரத்தில்