பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-அன்று

9



படைப்பு, அழிப்பு, அளிப்பு ஆகிய விளையாட்டிற்குக் கருவி யாய்ப் பயன்படுகின்றது."

நான்முகன் செருக்கை அடக்கின வரலாது : இந்த இடத்தில் பொருத்தமில்லையாயினும், நான்முகன் செருக்கையடக்கின வரலாற்றைச் சுவைக்காகக் கூறுவேன். தன் ஆயுள் மிகவும் நீண்டிருத்தல் பற்றி அகங்காரம் கொண்டிருந்தான் நான்முகன், இந்தச் செருக்கை உரோமேசர் என்னும் மாமுனிவரால் தொலைத்திட்டான் பரந்தாமன். இந்த வரலாறு எந்த இதிகாச புராணங்களிலும் காணப்படவில்லை. ஆயினும் அழகிய மணவாள சீயர் அருளிச்செய்துள்ள விவரம்: உரோமேசர் உடல் முழுதும் கரடிபோல் அடர்ந்த மயிர்களையுடைய ஒரு மாமுனிவர். இவர் நீண்டகாலம் வாழ்ந்திருந்து எம்பெருமானைச் சிந்தனை செய்ய வேண்டும் என்ற குதுகல முடையவராய் நீண்ட ஆயுள் பெறுவதற்காக ஒரு புண்ணிய நதிக்கரையில் தவம் புரிந்து கொண்டிருக்கையில் அளவுகடந்த ஆனந்தம் கொண்ட சீமந்நாராயணன் இவர் முன்னே சேவை தந்தருளி, "உம்முடைய விருப்பத்தைக் கூசாமல் தெரிவித்தருள்க" என்று சோதி வாய் திறந்து அருளிச் செய்தான். மாமுனிவரும் "இந்த உடம்புடன் உன்னை நெடுங்காலம் வழி படவேண்டும் என்ற பேராசை கொண்டுள்ளேன். அநேகமாயிரம் பிரமாக்களின் ஆயுளினை என் ஒருவனுக்குக் கற்பித்தருளினால் மகாப்பிரசாதமாகும்" என்று கைகூப்பிக் கனிந்து விண்ணப்பம் செய்தார். எம்பெருமானும் அப்படியே திருவுள்ளம் உவந்து "மாமுனிவரே, பிரமனின் ஆயுளின் முடிவை நீர் அறிந்ததே. ஒரு பிரமன் காலஞ் சென்றால், உம்முடைய திருமேனியினின்றும் ஓர் உரோமம் இற்று விழக் கடவது; இப்படி ஒவ்வொரு பிரமாவின் முடிவிலும் ஒவ்வொரு மயிராக இற்று விழுந்து 'இனி திருமேனியில் ஒர் உரோமமும் இல்லை/ என்று சொல்லத்தக்க நிலைமை நேருமளவும் நீர்


9. இவ்வாசிரியரின் 'முத்தி நெறி' (பக்45-46) என்ற

நூலில் (பாரி நிலையம். சென்னை-600 108) காண்க.