பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்



இரட்டையர்கள் ஆவர். இவ்வகைக் குழவிகள் கருப்பையில் வளரும் பொழுது ஒரே 'கோரியானால்' (Chorion) மூடப் பெற்றிருக்கும். கருப்பந்தின் உட்புறத்தில் உயிரணுக்கள் ஒரு வரிசையாகவும் கருப்பந்துச் சுவருடன் சேர்ந்தும் அமையும் அமைப்பே 'கோரியான்’ என்பது. இவ்வமைப்பு தாயின் குருதியிலிருந்து உணவுச் சத்துக்களைப் பெறுவதற்குத் துணை செய்கின்றது. மேலும், ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனிப் பணிக்குடமும் (Amniotic sac) தனித்தனிக் கொப்பூழ்க் கொடியும் இருக்கும். கொப்பூழ்க் கொடிகள் ஒரே நஞ்சுடன் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய இரட்டைப் பிறவிகள் அச்சு இரட்டைகள் என்று வழங்குவதும் உண்டு.

இருகரு இரட்டையர் (Fraternal Twins): இவை இரண்டு முட்டைகள் கருவுறுவதனால் உண்டாகும். சாதாரணமாக மாதத்திற்கு ஒரு முட்டைதான் முதிர்ந்து கருக்குழலில் செல்லும்; சில சமயங்களில் இரண்டு முட்டைகள் (ஒவ்வொரு சூற்பைகளிலும் ஒன்று வீதம் முதிர்ச்சியுற்றுக் கருக்குழல்களில் செல்வதுண்டு. ஒவ்வொரு முட்டையிலும் ஒவ்வொரு விந்தணு புகுந்து இரண்டுமுட்டைகளும் கருவுறும். இவ்வாறு கருவுற்ற முட்டைகள் கருப்பையில் வெவ்வேறு இடங்களில் பதிந்து கொண்டு இரண்டு கோரியான்களில் வளரும். ஒவ்வொன்றுக்கும் தனித்தனிப் பனிக்குடமும், தனித்தனிக் கொப்பூழ்க் கொடியும், தனித்தனி நஞ்சும் இருக்கும். இவ்வாறு பிறக்கும் இரட்டைக் குழவிகள் உருவம், தன்மை முதலானவற்றில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஒன்று ஆணாகவும் மற்றொன்று பெண்ணாகவும் அமையலாம்; அல்லது இரண்டு ஆணாகவோ பெண்ணாகவோ அமையலாம். இரண்டு முட்டைகளின் நிறக்கோல்கள் பிரியும் பொழுது இரண்டினுடைய நிறக் கோல்களும் ஒரே மாதிரியாக அமையும் என்று சொல்வதற்கில்லை. ஒரு முட்டையில் தாய் வழிப்பாட்டனிடமுள்ள நிறக்கோல்கள் அதிகமாகவும், மற்றொன்றில் தாய்வழிப்பாட்டியிடமுள்ள நிறக்கோல்கள் அதிகமாகவும் அமையலாம். மேலும், இந்த இரண்டு முட்டைகளும் வெவ்வேறு முறையில் அமைந்த நிறக்கோல்களைக் கொண்ட இரண்டு தனிப்பட்ட விந்தணுக்களால் கருவுறுகின்றன. இதனால்தான் இவை பல பண்புக் கூறுகளில் வேற்றுமையுடன் அமைகின்றன. இதனால்தான் நிறம்,