பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

தமிழில் அறிவியல்- அன்றும் இன்றும்




ஞாலத் திகிரி முதுநீர்த் திகிரி
நடாத்தும் அந்தக்
காலத் திகிரி முதலான யாவும்

என்று பாடுகின்றார்.

காலம் முதலான மூல சக்கரங்களுக்கெல்லாம் விசை கொடுத்து முடுக்கி விட்ட உள் மூல சக்கரம் ஒன்று உண்டு. அதைப் பற்றிப் பேசப் போகின்றார் கவிஞர். இதனை அறிந்து கொள்வதற்குச் சுமார் 200 ஆண்டுகட்கு முன்னர் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியை நினைவுகூரலாம். நீலகிரி மலைமேல் இப்போது ஒய்யாரமாக அழகுடன் திகழும் உதகமண்டலம் அந்தக் காலத்தில் இல்லை. அது மக்கள் நடமாடாத ஒரே மலங்காடாக இருந்தது. கிழக்கிந்தியக் கம்பெனியில் அலுவல் பார்த்த ஒர் ஆங்கிலேயர் தற்செயலாக மலை ஏறிச் சுற்றி வந்த போது, இப்போது உதகமண்டலம் இருக்கும் மலை உச்சியில் ஓர் அழகிய நகரத்தை நிர்மாணிக்கலாம் என்று எண்ணினார். இங்கிலாந்திலிருந்து ஒரு சிற்பியை வரவழைத்தார். கோடை வெப்பக் கொடுமையினின்றும் தப்பி ஆங்கிலேயர் வாழ்வதற்குரிய ஒரு நகரத்தை அமைக்கும்படி ஏவினார். நகரத்தை அணி செய்யவும் நகரத்துவாழ் மக்களின் மனத்திற்கு இதமாக இருக்கவும் ஒரு பூங்காவையும் அமைக்க வேண்டும் என்று திட்டம் தீட்டினார் சிற்பி. அவருடைய சங்கல்பத்தில்-கற்பனையில்-விதவிதமான பூஞ்செடிகள் பூத்துக் குலுங்கின; விண்ணை முட்டும் விதவிதமான மரங்கள் கப்பும் கிளையுமாகக் காட்சி அளித்தன. அவர் உள்ளத்தில் தோன்றின சோலையை அவரோடு ஒத்துழைத்த ஏவலர்கள் காணவில்லை.

ஒரு பனை மட்டையைக் கையில் வைத்துக்கொண்டு சுண்ணாம்பு நீரில் அதனை முக்கி முக்கி ஒரு கோலம் இட்டுக்கொண்டே போனார் சிற்பி. பின் சென்றவர்கள் அவர் இட்ட கட்டளைப்படி அந்தக் கோலத்தின் புள்ளிகளிலும் வளைந்து நெளிந்து செல்லும் கோடுகளிலும் விதைகளை விதைத்தார்கள்; பதியங்களைப் பதித்தார்கள்; செடிகளை நட்டார்கள். சிற்பியின் கட்டளைப்படி இன்னும் பல வித செயல்களைப் புரிந்தார்கள். பலப் பல ஆண்டுகள் உருண்டோடின. அதன் பின்னர் தான் இப்போது நாம் உதகையில் காணும் அற்புதப் பூங்காவை.