பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல் - அன்று

21


(Botanical gardens)-நனவாகிய சிற்பியின் கனவை - மற்றவர்களும் கண்டு மகிழ முடிந்தது; மற்றவர்கட்கு அருவமாக இருந்த சிற்பியின் அகக்காட்சி, இப்போது மற்றவர்கட்கும் காணக்கிடைத்த புறக்காட்சியாக உருவாயிற்று. இன்று அது. செல்வர்கட்குக் கோடையில் வாழும் இடமாகக் காட்சி அளிக்கின்றது.

இதைப் போலத்தான் இறைவன் என்ற 'அலகிலா விளையாட்டுடை' சிற்பியின் சங்கல் பத்தில் - அகக்காட்சியில் - தோன்றியது பேரண்டம்; அண்டபகிரண்டமும் அகிலாண்ட கோடி எல்லாமும். பின்னர்தான் அது புறக்காட்சியாக மாறியது. நம்மாழ்வார் கூறும் "சூழ்ந்து, அகன்று, ஆழ்ந்து, உயர்ந்த முடிவில் பெரும் பாழாகக்" கிடந்த எல்லையிலாப் பரவெளியில் அண்டங்கள் பூத்து மலர்ந்தன. சூரியர்களும் சந்திரர்களும் கோள்களும் விண்மீன்களும் தோன்றி மாபெரும் உருளைகளைப் போல வெட்ட வெளியில் சுழலுகின்றன. ஒரு கணக்குப்படிச் சுழல்கின்றன. ஒன்றோடொன்று மோதாமல், போக்குவரத்தில் நேரிடும் விபத்துக்களின்றி, கோலங்களின் கோடுகளிலும் புள்ளிகளிலும் ஆணைக்கு அடங்கி நின்று, ஆனால் கற்பனை கடந்த வேகத்தில் சுழல்கின்றன. அந்த ஆங்கிலச் சிற்பியிட்ட கோலத்தினுள் விதைகளினின்றும், பதித்த பதியங்களினின்றும், நட்ட செடிகளினின்றும், காலத்திகிரியின் சுழற்சியிலே, வெளிவந்த உதகமண்டலப் பூங்காவைப் போல. பேரண்டப் பூங்காவும் வெட்ட வெளியிலிட்ட கோலங்களினின்றும் வெளிவந்து விரிந்து பெருகிச் சுழன்று கொண்டுள்ளது.

இந்த வெட்ட வெளியில் கோலத்தை இட்டவர் யார்? பாற்கடல் கிடலில் பரமன்; திருஅரங்கத்தில் பள்ளிகொண்டிருக்கும் பெரிய பெருமாள்; அரங்கநகர் அப்பன். பாற்கடலைக் கடைந்த போது ஒரு நீலமலையை மத்தாக வைத்துக்கொண்டு கடைந்தார். அந்த மத்தைப் போல நீலமேனியையுடையவர் நம் அரங்கர். நியதிக்கோலத்தைப் போடவேண்டும், அதற்கு அடங்கிப் பேரண்ட உருளைகள் சுழலவேண்டும் என்று சங்கற்பித்தார் அறிதுயிலிலிருந்த அரங்கர். அவ்வளவுதான்.