பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்


இராமகாதை : இராமகாதையில் புடபக விமானத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. வீடணனுக்கு முடிசூட்டு விழா நடைபெற்ற பிறகு இராமன் முதலியோர் அயோத்திக்குத் திரும்பும் வேளை வருகின்றது. இராமன் வீடணனை நோக்கி "இப்பொழுதே அயோத்திக்குச் சென்று சேரத்தக்க ஊர்தி உளதோ?’ என்று வினவ, அதற்கு விடையாக "விமானம் உளது?" என்கின்றான். இந்த விமானம் குபேரனுக்குரியது; நான்முகனை நோக்கித் தவம் செய்து பெற்றது. அதனை இராவணன் அவனிடமிருந்து பெருஞ் செல்வத்துடன் கவர்ந்து கொண்டான் என்று கூறினான்; அதன் தன்மையையும்,

'ஓங்கு மால்வெள்ளம் எழுபஃது
ஏறினும் ஒல்காது
ஈங்கு ளாரெலாம் இவருவது
இவரின் நீ இனிது
பூங்கு லாநகர் புகுதிஇஞ்
ஞான்று'30

என்று விளக்குகின்றான். இராமன் அவ்விமானத்தைக் கொணருமாறு கூற, வீடணன் அதனைக் கொணருகின்றான். அது ஒரு பெரிய வானப் பேருந்து (Air bus) போல் வந்து சேர்கின்றது.

அண்ட கோடிகள் அநந்தமொத்(து) ஆயிரம் அருக்கர் விண்ட தாம்என விசும்பிடைத் திசையெலாம் விளங்கக் கண்டை யாயிரம் கோடிகள் ஒலிப்புறக் கஞலக் கொண்ட ணைந்தனன் நொடியினின் அரக்கர்தம் கோமான்31 என்பது விமானத்தின் தோற்றம். ஆயிரம் சூரியர்கள் ஒரே சமயத்தில் தோன்றினாற்போல, தன் பேரொளியால் எல்லாத் திசைகளும் விளக்கமடையவும் மிகப் பலவான மணிகள் அதிகமாக ஒலிக்கவும் விமானத்தை வீடணன் கொணர்ந்தான். இந்த விமானம் நினைத்தபடித் தடையின்றிச் செல்ல வல்லது.


30. கம்ப. யுத்த-மீட்சி 143

31. மீட்சி. 14