பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-அன்று

27



4. வானியல் (Meteorology) வானியல் பற்றிய ஒரு சில கருத்துகள் இலக்கியங்களில் காணப் பெறுகின்றன. மேலே செல்லச் செல்ல காற்று இலேசாக இருக்கும் என்பது அறிவியல் உண்மை. இதைக் கம்பன் மிகச் சமத்காரமாகக் கூறுவான். இலங்கையிலுள்ள மாளிகைகள் உம்பர் உலகை எட்டும்படியான நிலையில் உள்ளன. மேருவையும் வருத்தக் கூடிய வாயு அந்த உயரமான இடங்களில் தென்றலாய் வீசுகின்றதாம்.

நாகா லயங்களொடு நாகர்உல குந்தம்
பாகார் மருங்குதுயில் என்னஉயர் பண்ப;
ஆகாயம் அஞ்சஅகன் மேருவை அணுக்கும்
மாகால் வழங்குசிறு தென்றல்வர நின்ற32

என்பது கம்பன் வாக்கு. தேவர்கள் வாழ்கின்ற இல்லங்கள் உட்படத் தேவலோகம் தமது பகுப்பாய்ப் பொருந்திய ஓரிடத்தில் (கீழ் நிலையில்) இனிது தங்கத் தக்கன என்னும்படி மிக்க உயர்ச்சியுடையவை இலங்கை நகரத்து மாளிகைகள் என்பது முதல் இரண்டடியின் கருத்து. அங்ங்னம் அவை மிக உயர்ந்திருந்தாலும், மிக்க வலிமையுடைய வாயுதேவன் இராவணனிடத்துக் கொண்டுள்ள அச்சத்தால்அடங்கி மந்த மாருதமாக-தென்றலாக - இனிது வீசப்பெற்றிருந்தன என்பது பின்னிரண்டு அடிகளின் கருத்து. இங்கு இயல்பாக உள்ள அறிவியல் உண்மை கற்பனையாகக் கவிதையில் வெளிப்படுவதைக் காணலாம்.

கதிரவன் மகரரேகைக்குத் தெற்கே செல்லுவதில்லை என்பது அறிவியல் உண்மை. இது மிகச் சமத்காரமாகக் கூறப் பெற்றுள்ளது கம்பன் காவியத்தில். இலங்கை மகரரேகைக்குத் தெற்கே நெடுந்தொலைவில் இருப்பதால் அங்குக் கதிரவன் ஒளிபடுவதில்லை. இதனைக் கம்பன்,

முன்னம் யாவரும் இராவணன்
முனியும்என்று எண்ணிப்
பொன்னின் மாநகர் மீச்செலான்
கதிரெனப் புகல்வார்;


32. கம்ப. சுந்தர. ஊர்தேடு-2