பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-அன்று

29


என்பது பாரதியாரின் ஞாயிறு வணக்கப் பாடல். இதில் கவிஞனின் ஆழ்ந்த சிந்தனை நிழலிடுகின்றது. ஞானியர் காண்கின்ற 'ஆழ்ந்த நோக்கை' கவிஞர்களும் சில சமயம் காண்கின்றனர் என்பதற்கு இஃது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். பண்டுதொட்டுத் தமிழ் நாட்டில் பொங்கல் விழா கதிரவன் விழாவாக-ஆற்றல் விழாவாக-இருந்து வந்துள்ளது என்பதைத் தமிழர்கள் அனைவரும் நன்கு அறிவர். ஒரு சடங்கு போல் விழா நடந்து வந்த போதிலும் அதன் அடிப்படையில் பல உண்மைகள் உறைந்து கிடக்கின்றன.

பாடலின் உட்பொருள் : முதலில் மேற்காட்டிய பாரதியாரின் ஞாயிறு வணக்கப் பாடலை நோக்குவோம். கதிரவனைக் காதலனாகவும் பூமியைக் காதலியாகவும் உருவகித்துக். காண்கின்றான் கவிஞன். இந்த இரண்டு பொருள்களும் 'காதலன் காதலி தரிசனம்' தந்து நிற்கின்றன கவிஞனுக்கு. ஆம், உண்மையும் அதுதான். இந்த இரண்டும் இணங்கி இணைந்து இயங்குவதனால்தான், இவ்வுலகிலுள்ள நிலைத்திணையும் இயங்குதினையும் தோன்றி நிலை பெற்றுள்ளன. "செம்பொன்னை உருக்கி வார்த்தாலெனக் காட்சியளிக்கும் அந்திவான் செக்கர் அழகும், கொண்டல் கொண்டலாக ஒடும் புயலின் அழகும், அது பொழியும் மழையின் அழகும், அத்தண் புனல் மணற்களை அரித்தோடும் அருவியின் அழகும், பச்சை பசேலெனப் பெருங்காட்சியளிக்கும் பொருள்களின் அழகும், அவற்றில் பச்சைப் பாம்பெனப் பின்னிக்கிடக்கும் பசுங்கொடிகளின் அழகும், அவற்றினின்றும் அரும்பியுள்ள நகை மலர்களின் அழகும்" நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகின்றன. கதிரவன்-பூமி என்ற இரண்டும் கலந்து வாழும் வாழ்க்கையில் நாம் காணும் காட்சிகள் இவை. இவற்றின் அறிவியல் உண்மைகளை இப்பொழுது விளக்குவேன்.

ஒளிச்சேர்க்கை: ஒளிச்சேர்க்கை ((Photo-Synthesis) இயற்கையில் நடைபெறும் ஓர் அற்புத நிகழ்ச்சி. தாவரங்கள். காற்றிலுள்ள கரியமிலவாயு, வேர்களின் மூலம் பெறும் நீர் இவற்றை உட்கொண்டும், கதிரவன் ஒளிக்கதிர்களாகவும் வெப்பக் கதிர்களாகவும உமிழும் ஆற்றலைத் துணைக் கொண்டும் கார்போஹைட்ரேட்டுகள் போன்ற பொருள்களைச்