பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்


முக்கணான் முதலி னோரை
உலகொரு மூன்றி னோடும்
புக்கபோர் எல்லாம் வென்று
நின்றஎன் புதல்வன் போலாம்
மக்களில் ஒருவன் கொல்ல
மாள்பவன் வான மேரு
உக்கிட அணுவொன்று இடி
உதைத்தது போலும் அம்மா 44

என்பது கம்ப நாடனின் வாக்கு. "என் மகன் மேகநாதன் சாதாரணமானவன் அல்லன். மூன்று உலகங்களிலும் நடைபெற்ற போரில் எல்லாம் மூன்று கண்களையுடைய சிவபெருமானையும் வென்று வாகை சூடியவன். அத்தகையவன் இன்று கேவலம் ஒரு மனிதனால் கொல்லப்பட்டு விட்டான். இது வானுற வோங்கி வளர்ந்து நிற்கும் மேருமலையை அணு ஒன்று ஒடி உதைத்தது போலல்லவா இருக்கின்றது?" என்று கணக்குப் போட்டுப் புலம்புகின்றாள். இங்கும் அணு ஒரு சிறிய பொருள் என்ற கருத்தை மட்டிலுமே தருகின்றது.

சமணமதம் பேசுவது அணுக் கொள்கையைத் தான். மணிமேகலை என்ற நூலில்,

எல்லைஇல் பொருள்களில் எங்கும்எப் பொருளும்
புல்லிக் கிடந்து புலப்படு கின்ற
வரம்புஇல் அறிவன் இறை; நூற் பொருள்கள்ஐந்து
உரம்தரு உயிரொடு, ஒருநால் வகைஅணு
அவ்வணு உற்றும், கண்டும் உணர்ந்திட
பெய்வகை கூடிப் பிரிவதும் செய்யும்
நிலம்நீர் தீகாற்று என நால் வகையின்
மலைமரம் உடம்புஎனத் திரள்வதும் செய்யும்,
வெவ்வேறு ஆகி விரிவதும் செய்யும்,
அவ்வகை அறிவது உயிர்எனப் படுமே!45

என்று ஆசீவகவாதி தன் சமயத்தை விரித்துரைப்பதைக் காண் கின்றோம். நியாய மதம், வைசேடிக மதம் என்பவை அணுக்


44. கம்பரா. யுத்த. இராவணன் சோகப்-52

45. சமயக் கணக்கர் தந்திரம் கேட்ட காதை-அடி

110 –119