பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


நூல் முகம்


அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி,
அகத்திலே அன்பினோர் வெள்ளம்,
பொறிகளின் மீது தனியர சாணை,
பொழுதெலாம் நினதுபே ரருளின்
நெறியிலே நாட்டம், கருமயோ கத்தில்
நிலைத்திடல் என் றிவை யருளாய்
குறிகுண மேதும் இல்லதாய் அனைத்தாய்க்
குலவிடு தனிப்பரம் பொருளே!¹

-பாரதியார்

ந்த ஆண்டு (1990) மார்ச்சுத் திங்கள் இறுதி வாரத்தில் உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்து இயக்குநர் பேராசிரியர் டாக்டர் சிலம்பொலி செல்லப்பனாரிடமிருந்து ஓர் அழைப்புக் கடிதம் வந்தது. முனைவர் செ. அரங்கநாயகம் அறக்கட்டளை நினைவுச் சொற்பொழிவுகள் இரண்டு நிகழ்த்துமாறும், ’தமிழில் அறிவியல்’ என்ற தலைப்பில் என் பொழிவுகள் அமையலாம் என்றும், இந்தப் பொழிவுகள் ஏப்பிரல் இறுதியிலேயே, நடைபெற்றால் நிறுவன நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற வாய்ப்பாக இருக்கும் என்றும் கடிதத்தின் குறிப்பாக இருந்தது.

'தமிழில் அறிவியல்’ என்பது என் இயல்புக்கேற்ற தலைப்பு. கடந்த ஐம்பது ஆண்டுகளாக இஃது எனது மூச்சாகவும் சிந்தனையாகவும் இருந்து வருகின்றது. இச் சிந்தனைகள் 14 நூல்களாகவும் வெளிவந்துள்ளன. தமிழ் இலக்கியங்களிலும் அறிவியல் பற்றிய குறிப்புகளை ஆங்காங்குப் பல கட்டுரைகளாகவும் வெளியிட்டிருக்கின்றேன். இதனால் இயக்குநர் டாக்டர் செல்லப்பனாருக்கு உடனே என் இரண்டு நாள் பொழிவுகள் தமிழில் அறிவியல்-அன்று, தமிழில் அறிவியல்-இன்று என்று வைத்துக்கொள்ளுமாறு எழுதி விட்டேன். திட்டப்படி ஏப்பிரல் 24, 25 நாட்களில் சொற்பொழிவுகள் நடைபெற்றன.


1. பா. க: சுயசரிதை-49