பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தழிழில் அறிவியல்-அன்று

51


என்று பாடியுள்ளார். அவர் 'மரபு' என்பது பற்றிச் சிந்தித்திருப்பதை நாம் காணமுடிகின்றது. கபிலர் என்ற முனிவர்,

பெற்றமும் எருமையும் பிறப்பினில் வேறே
அவ்விரு சாதியில் ஆண்பெண் மாறிக்
கலந்து கருப்பெறல் கண்ட துண்டோ?67

என்கின்றார். ஆயினும் ஒரு குதிரையும் கழுதையும் கலவி புரிவதால் கோவேறு கழுதை (Mule) உண்டாகின்றது. ஆனால் கோவேறு கழுதைகள் யாவும் மலடாகவே இருக்கும். இதற்கு இக்கால அறிவியலறிஞர்கள் ஆய்ந்து உண்மை கண்டுள்ளனர்.

இரட்டைப் பிறவிகள்: இரட்டைப் பிறவிகள் ஏற்படுவது ஒரு மரபுவழிப் பண்பு என்று அறியக் கிடக்கின்றது. சில குடும்பங்களில் இப்பண்பு அடிக்கடித் தலைகாட்டுகின்றது. ஒரே தாயிடம் தொடர்ந்தாற்போல் பல பிறவிகளையுடைய குழந்தைப் பேறு ஏற்படக் காண்கின்றோம்; ஒர் ஆஸ்திரியப் பெண்மணி 69 குழவிகட்குத் தாயான செய்தியை அறிகின்றோம். அவள் நான்கு தடவைகள் நந்நான்கு குழந்தைகளையும், ஏழு தடவைகள் மும்மூன்று குழவிகளையும், பதினான்கு தடவைகள் இரட்டை குழவிகளையும் பெற்றெடுத்ததாக அறியக் கிடக்கின்றது.68 ஆயினும் பெண்ணின் செல்வாக்கு மட்டிலும் இப்பிறவிகளில் ஒரு முக்கிய கூறாக அமையவில்லை என்றும், ஆண்வழியாகவும் இக்கூறுகள் அமைவதற்குச் சான்றுகள் உள்ளன என்றும் அறிகின்றோம். இரண்டுமுறை மணந்து கொண்ட ஒரு மனிதனுக்கு முறையே இரட்டைப் பிறவிகளும் மூன்று குழவிப் பிறவிகளும் அதிகமாக ஏற்பட்டதற்குச் சான்றுகள் கிடைக்கின்றன.

நம் நாட்டுப் புராணக் குசேலருக்கு இருபத்தேழு குழவிகள் இருந்தன என்பதை நாம் அறிவோம். அக்குழவிகள் கஞ்சிக்காகப் படும் பாட்டை,

ஒருமகவுக் களித்திடும்போ தொருமகவு
கைநீட்டும்; உந்திமேல் வீழ்ந்து
இருமகவும் கைநீட்டும்; மும்மகவும்
கைநீட்டும் ஏன்செய் வாளால்;


67. கபிலரகவல்-அடிகள் (68-70)

68. வாழையடி வாழை -பக், 37