பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

தமிழில் அறிவியல்- அன்றும் இன்றும்



பெற்றுள்ளது. இன்றைய செய்தித் தாள்களில் கூட குமாரி குமாரன் ஆன நிகழ்ச்சிகள் வெளியாகின்றன. முன் குமரப் பருவத்தில் இவை நடைபெறுகின்றன என்றும், ஆனால் ஆண் பெண்ணாக மாறுவதில்லை என்றும் அறிகின்றோம். அடுத்த பொழிவில் இதனை விளக்குவேன்.

(2) அருச்சுனன் பேடியான நிகழ்ச்சி மற்றோர் இதிகாசச் செய்தி. அருச்சுனன் பாசுபதம் பெற்றபிறகு இந்திரன் அவனைத் தன் உலகிற்கு அழைத்துச் செல்கின்றான். விருந்தளிக்கின்றான். ஊர்வசியின் நடனம் நடைபெறுகின்றது. பின்னர் அமுதுண்டு விசயன் தனி மாளிகையில் தங்குகின்றான். காம உணர்ச்சியால் தூண்டப்பெற்ற ஊர்வசி அருச்சுனன் தங்கியிருந்த இடத்திற்கு வருகின்றாள். விசயன் அவளைத் தாய் எனக் கருதி அவள் பாதங்களை வணங்குகின்றான். உருப்பசிக்குச் சீற்றம் மிகுகின்றது. நஞ்சு கலந்த மொழி அவள் வாயினின்றும் வெளிப்படுகின்றது. 'நீ பேடியர் இயல்பு ஆக’ எனச் சாபம் இடுகின்றாள். சாபத்தால் பேடியான விசயன் உளம் நொந்து ஆடையால் மூடித் துயில்கின்றான். அடுத்தநாள் இந்திரன் தேவர்களுடன் விசயனை அணுகி 'சாபம் தணியும்' - என்று. தேற்றுகின்றான். பின்னர் உருப்பசியின் திருமாளிகை சென்று உருப்பசியை வேண்டி சாப விடை பெறுகின்றனர். விசயன் வேண்டும்போது பேடி உரு எய்தலாம் என்று அவள் அருள, விசயன் முன்னைய வடிவு பெறுகின்றான்.71 பாண்டவர்கள் தம் கரந்துரை வாழ்வின்போது விராட நாட்டில் ஒவ்வொரு வரும் தமக்கேற்ற உருவம் கொண்டு தங்குகின்றனர். அருச்சுனன் பிருகந்நளை என்ற பேடியாய் உருவந் தரித்ததை வில்லிபுத்துாரார்,

நீடிய சிலைக்கைத் தேவன்கோன் மதலை
நிருத்தநல் அரங்கினில், முன்நாள்,
வாடிய மருங்குல், புனைத்தபூண் கொங்கை
வாள்தடங் கண்கள்வார் குழைமேல்


71. வில்லிபாரதம்: அருச்சுனன் தவநிலைச் சருக்கம்

156-175.