பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்


 நடைபெறுவது வேதனை தருவதாகும். தவிர சில ஆண்கள் தமது தீய ஒழுக்கங்களால் மதுபானம், பரத்தையர் நாட்டம் போன்றவை. இதைச் சீரழியச் செய்கின்றனர். இதில் ஏழைகள், செல்வர்கள் என்ற வேறுபாடே இல்லை. செல்வர்கள் என்றால் நாகரிகப் போர்வையால் திரைக்கு வெளியில் நடைபெறும் நாடகம் போல், திரைமறைவில், நட்சத்திர விடுதிகளில் நடைபெறுகின்றது. அக்கினி சாட்சியாக பல சான்றோர்கள் முன்னிலையில், மந்திரம் முதலிய சடங்குகளுடன் நடைபெற்ற நிகழ்ச்சி பாழடைகின்றது. அது ஊரே சிரிக்கும் நிகழ்ச்சியாக மாறிவிடுகின்றது. நம் நாட்டில் இது நன்கு போற்றப்படினும், ஆபாசப் படக்காட்சிகள், அருவருக்கத்தக்க மூன்றாந்தர ஏடுகள், கதைகள் இவற்றால் இந்தத் தெய்விக உறவு - சமூக ஏற்பாடு-சரியத் தொடங்குவதைக் கண்டு பெரியோர்கள் வருந்துகின்றனர். இது நிற்க.

திருவள்ளுவரும் தொல்காப்பியரும் 'காமம்' என்ற சொல்லைப் பல இடங்களில் உயரிய பொருள்களில் ஆண்டுள்ளனர். இன்பக் கூறான இணைவிழைச்சு ஆண் பெண் என்ற இருபாலாரின்கண் நிகழும் என்ற கருத்தை ஆசிரியர் தொல்காப்பியனார்,

எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும்73

என்ற நூற்பாவில் எடுத்தோதியுள்ளார். இன்பம் என்பது மக்களிடத்தேயன்றி விலங்கு, பறவை முதலிய எல்லா உயிர்களிடத்தேயும் பொருந்தி நிகழுமாதலின், அதனை இந்த நூற்பாவில் சிறப்பித்துள்ளார். இங்ஙனம் இன்பம் எல்லா உயிர்க்கும் பொதுவாக நிற்றலின்,

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்74

என்ற நூற்பாப் பகுதியினுள் எடுத்தோதியுள்ளார். இன்பக் கூற்றினை ஈண்டு முதலில் எடுத்தோதியுள்ளார் என்பதை அறிதல் வேண்டும். "பலவகை உயிர்கட்கும் வரும் இன்பம்


13. தொல்-பொருளியல்-நூற்.27 (இளம்)