பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்



குறிப்பாகக் கன்னங்கள், தாடைகள் போன்ற இடங்களில் அதிகமாகத் திரளுகின்றது. இதனால் திரைத்த தோலால் மூடப்பெற்ற தொங்கிய கன்னங்கள், கொழுத்த தாடை தோன்றி முக அழகையே மாற்றி விடுகின்றன. சிலருக்குக் கழுத்திலும் கொழுப்பு ஏறுகின்றது. புயங்களிலும் உருண்டை வடிவம் மறைகின்றது. தோல் தொங்கி தசைகளும் மெதுவாகின்றன. முதுகிலும் பிற இடங்களிலும் அருவருப்பான தவிட்டு நிறப் புள்ளிகள் தோன்றுகின்றன. சூற்பைகளின் செயல்கள் நின்று போவதே இம் மாறுபாடுகள் ஏற்படுவதற்குக் காரணம் ஆகும்.

பெண்ணின் உள்ளத்திலும் பல மாறுபாடுகள் நேரிடுகின்றன. அச்சம், சினம், துயரம், சகிப்புத் தன்மையில் குறைவு போன்ற உணர்ச்சிகள் அடிக்கடி தோன்றுகின்றன. சாதாரணமாக இவை தனிப்பட்ட பெண்களின் தன்னடக்கம், மீப்பண்பு ஆகியவற்றிற்கேற்ப குறைவாகவோ அதிகமாகவோ ஏற்படுகின்றன. மேற்கூறியவை யாவும் பழங்காலப் பெண்களிடம் தலைகாட்டுவதே இல்லை. ஆனால், நாகரிக நாரியர்கள் நரம்புத் தளர்ச்சியாலும் மனக்கோளாறுகளாலும் பாதிக்கப் பெற்றிருப்பதற்கேற்ப இவற்றால் அதிகம் தொல்லைப் படுகின்றனர்.

இந்நிலையில் கலவியில் ஈடுபடலாமா என்பது ஒரு பெரிய கேள்வி. இப் பருவத்தில் பெண்களில் பெரும்பாலோர் வயது வந்தோர் பலருக்குத் தாயாக இருப்பர்; அல்லது மாமியாராக இருப்பர்; அல்லது பாட்டியாகவும் இருப்பர்; இந்நிலையில் கலவியைப் பற்றி மருத்துவரிடம் கலந்தாய்வதில் அவர்கட்கும் அவர்களது துணைவர்கட்கும் துன்பந் தருவதாக இருக்கும்; நாணப்படுவதாகவும் இருக்கும்.

பெரும்பான்மையான பெண்களிடம் சூதக ஒய்வு ஏற்படுங்காலத்திலும் அதற்குச் சற்று முன்பும் தீவிரமான காமக் கிளர்ச்சி தோன்றுகின்றது; அவர்கள் பால்விழைவினால் அதிகம் உந்தப் பெற்றுப் பாலின்பத்தை நாடுவர். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. பிறப்புறுப்புக்களில் ஏற்படும் மாற்றங்கள் அவற்றில் அதிக அரிப்பினை விளைவிக்கின்றன. இதனால் பெண்ணின் கவனம் பிறப்புறுப்புகளின்மீது செல்லுகின்றது.