பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-அன்றும்

67


முறைகளை மேற்கொண்டு அந்நோயைப் போக்க வேண்டும் என்பது பண்டைய மருத்துவ முறையாகும். இன்றைய மருத்துவ முறையையும் அதுதான்.இன்னும் சில முறைகளைக்காண்போம்.

கண் முதலிய நுட்பமான பகுதிகளில் இரும்புத் துாள் முதலியவை புகுந்து கொண்டால் காந்தத்தைக் கொண்டு இக்காலத்தில் சிகிச்சை செய்கின்றனர். பண்டையோரும் இம்முறையை அறிந்திருந்தனர் என்பதைக் கம்பன் காட்டுவான் இராவண வதம் முடிந்த பிறகு தயரதன் உம்பருலகிலிருந்து பூமிக்கு வந்து இராமனுடன் உரையாடும் பொழுது தன் மகிழ்ச்சியை இவ்வாறு தெரிவிக்கின்றான்.

அன்றுகேகயன் மகள்கொண்ட
வரமெனும் அயில்வேல்
இன்றுகாறும்என் இதயத்தின்
இடைநின்ற தென்னைக்
கொன்று நீங்கல திப்பொழுது
அகன்றதுன் குலப்பூண்
மன்றல்ஆகமால் காந்தமா
மணியின்று வாங்க.86

அன்று கைகேயி தன் இதயத்தில் பாய்ச்சின வரம் எனும் அயில்வேல், இன்று இராமனைத் தழுவியதனால், அவன் மார்பாகிய காந்தம் அதனை வாங்கிவிட்டது என்று கூறுவதில் நவீன சிகிச்சை முறையின் குறிப்பைக் கண்டு மகிழலாம்.

கருவுயிர்த்த மங்கையர் குழந்தையை நீராட்டி மருந்துாட்டி வளர்க்கும் திறம் சிந்தாமணியில் காட்டப் பெறுகின்றது.

காடி யாட்டித் தராய்ச்சாறும்
கன்னல் மணியும் நறுநெய்யும்
கூடச் செம்பொன் கொளத்தேய்த்துக்
கொண்டு நாளும் வாயுறீஇப்
பாடற் கினியப் பகுவாயும்
கண்ணும் பெருக உகிர்உறுத்தித்
தேடித் தீந்தேன் திப்பிலிதேய்த்(து)
அண்ணா உறிஞ்சி மூக்குயர்த்தார்87


86. கம்பரா-யுத்தகாண்-மீட்சி-118

87. சிந்தாமணி 2703 .