பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

தமிழில் அறிவியல்- அன்றும் இன்றும்



பிள்ளைப் பெருமாள் அய்யங்காரின் திருவரங்கத்து மாலையில் தசரத ராமாவதார வைபவம் கூறுபவையாக எட்டு பாடல்கள் (39-46) உள்ளன. அவற்றுள் ஒன்று மேற்காட்டிய கம்பன் பாடலைத் தழுவி எழுந்ததாகும்.

பேரொத்த ஆயிரம் பேர்மடிந்தால்
பிறக்கும் கவந்தம்
நேரொத்த ஆடும் அதுஆயிரம்
ஆடில் நெடுஞ்சிலையின்
நேரொத்த கிண்கிணி சற்றுஒல் இடும்
அதோர்யாமம் நின்று
காரொத்த மேனி அரங்காதம்
போரில் கறங்கியதே89

இப்பாடல் அரங்கநகர் அப்பனை இராமனாக நினைந்து பாடியது; மூலபல வதைப்படலத்திலுள்ள பாடலையொட்டி அமைந்தது. ஆயிரம் வீரர்கள் போரில் மடிந்தால் தலையற்ற உடற்குறையொன்று எழுந்து கூத்தாடும். அவ்வாறு ஆயிரம் கவந்தங்கள் எழுந்து கூத்தாடினால் இராமபிரானது கோதண்டத்தில் பொருத்தப் பெற்றிருக்கின்ற மணியானது சிறிது ஒலிக்கும்; திருவரங்கநாதரான இராமபிரானது போரில் அந்த மணி ஒரு யாமம் ஒலித்துது. யாமம்-ஏழரை நாழிகை; ஒரு நாளின் எட்டில் ஒரு பகுதி. இந்தப் பாடல் வில்லிபுத் துாராழ்வார் பாடலை ஒட்டியும் அமைந்துள்ளதாகக் கருத வேண்டும். இந்தவில்லியின் பாடலே கம்பன் அச்சில் வார்க்கப் பட்டிதாகும். வில்லியின் பாடல்:

அநேகம் ஆயிரம் பேர்பட கவந்தம்
ஒன்று ஆடும்; அக் கவந்தங்கள்
ஆநேகம் ஆயிரம் ஆட வெஞ்சிலைமணி
அசைந்து ஒருகால் ஆர்க்கும்
அநேக நாழிகை அருச்சுனன் சிலைமணி
ஆர்த்தது; அக்களம் பட்ட
அநேகம் ஆயிரம் விருதரை அளவு
அறிந்து ஆர்கொலோ உரைக்கிற்பார்?90


89. திருவரங்கத்து மாலை-44

90. பதினான்காம் போர்-48