பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-அன்று

71


துரோணர் சேனாதிபதியாக நின்று போர் புரிந்த போது பட்டவர்த்தனரும்,முடி மன்னரும் திரண்டு வந்து பார்த்தனுடன் பொருது பலர் உயிர் இழத்தலைக் கூறுவது இப்பாடல்.

10. வேளாண்மை இயல்: வேளாண்மையியல் பற்றியும் சில குறிப்புகளை இலக்கியத்தில் காணலாம். திருக்குறளில் 'உழவு' என்னும் அதிகாரத்தைக் கற்கும்போது இக்காலத்து உழவர்களின் நிலையை நினைந்து நினைந்து வருந்த வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இந்தி உலகிலேயே, திருமங்கையாழ்வார் வேறோர் சந்தர்ப்பத்தில்,

பெரியேன் ஆயினபின்
பிறர்க்கேஉழைத்து ஏழையானேன்.91

என்று கூறுவது போல, உழைத்து உழைத்து ஏழையர்களாகி வரும் சமூகம் இந்திய உழவர்கள் சமூகமேயாகும். 'ஏர்ப்பின்னது உலகம்’, 'உழுவார் உலகத்தார்க்கு ஆணி', 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்', 'பலர், குடை நீழலும் தன் குடைக் கீழ்க் காண்பர்' என்ற பேருண்மைகள் யாவும் இன்று உழவர்கள் விஷயத்தில் செல்லாக் காசுகளாக-வெறும் கவிதை உண்மைகளாக-இலங்குவதைக் காண்கின்றோம். நிற்க.

உழவுத் தொழில் பற்றிய ஒரு சில கருத்துகளை அறிவியல் நோக்கில் கூறுகின்றார். அகல உழுவதினும் ஆழ உழுதல் சிறப்பு என்ற அநுபவ மொழியை ஒட்டி, ஒரு பலம் புழுதி கால் பலம் ஆகிறவரைக்கும் நிலத்தைக் காயவிட வேண்டும்;அவ்வாறு காயவிட்டால் ஒருபிடி எருவும் இல்லாமலேயே பயிர்கள் செழித்து வளரும்.

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.92

நிலம் நன்கு உழுது அடிக்கடிப் புரட்டும் போது ஆற்றலின் மூலமாக -ஆதி மூலமாக-இலங்கும் வெய்யோன் ஒளியால் வெப்பத்தால் நிலமங்கை மிக்க ஆற்றலைப் பெறுகின்றாள்- அக்கினி நட்சத்திரத்தின் போது (சித்திரை) நமக்கு வெப்பம் தாங்க முடியாமல் இருந்தாலும், நிலமங்கை நல்ல ஊட்டம்


99. பெரி. திரு. 1.9:7

92. உழவு-குறள்-1037