பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்


பெறுகின்றாள். கோடை மழைக்குப் பிறகு எங்கும் உழவு நடைபெற்று வருவதைக் காணலாம்.

ஏர் உழுவதைவிட எரு இடுதல் நல்லது; களை நட்ட பிறகு, நீர் பாய்ச்சுதலைவிடக் காவல் காத்தல் நல்லது; ஆகவே இவை எல்லாவற்றையும் விடாமல் செய்வதே உழவன் கடமை யாகும்.

ஏரினும் நன்றால் எருஇடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு93

என்பது வள்ளுவம். உழவு பற்றி வேறு இலக்கியங்களை ஆராய காலம் இடந்தராமையால் வள்ளுவருடன் நிறுத்திக் கொள்ளுகின்றேன்.

இறுவாய்: அன்பர்களே, அறிவியல் செய்திகள் யாவும் மனத்தைப் பற்றியவை; இலக்கியச் செய்திகள் யாவும் உணர்வை அடிப்படையாகக் கொண்டவை. அறிவியல் பற்றிய பண்டைய தனி நூல்கள் நமக்குக் கிடைக்கவில்லை. அவை நமக்குக் கிடைக்குமாயின் மேலும் பல நுட்பமான செய்திகளை அறிந்து கொள்ளலாம். உணர்வை அடிப்படையாகக் கொண்ட இலக்கிய நூல்களில் அறிவு பற்றிய செய்திகள் அதிகமாக நுழைவதற்கு வாய்ப்பு இல்லை. எனவே, இதுகாறும் நாம் எடுத்துக் காட்டிய ஒரு சில இலக்கியக் குறிப்புகளைக் கொண்டு பண்டைய தமிழர்களின் அறிவியல் அறிவை ஒருவாறு ஊகித்து உணர்ந்து கொள்வதே நம்முடைய கடமை என்று கூறி இன்றைய பொழிவைத் தலைக்கட்டுகின்றேன். வணக்கம்.


93. குறள்-1038