பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24-4-1990

இரண்டாம் பொழிவு









தமிழில் அறிவியல்-இன்று


இயக்குநர் அவர்களே, தமிழன்பர்களே,

வணக்கம். இன்றைய அறிவியல் துறைகளில் நானறிந்த வரையில் நடைமுறையில் புழக்கத்திலிருக்கும் -அல்லது அன்றாட வாழ்வில் பயன்படும்-சில அறிவியல்துறைகளிலிருந்து சில கருத்துகளை உங்கள் முன் வைக்கக் கருதுகின்றேன். இவற்றுள் (1) கல்வியியல், (2) உளவியல், (3) அணுவியல் (இயற்பியல்-வேதியியல் கலந்த துறை), இவற்றை முதலில் விளக்க நினைக்கின்றேன். இவ்வாறு விளக்கும் போது (4) மருத்துவ இயல், (5) வேளாண்மையியல், (6) தொழில் துறையியல் ஆகிய மூன்று பகுதிகளிலும் எழும் கருத்துகளும் விளக்கம் அடைந்து விடும். இவற்றைத் தொடந்து (7) வான இயல், (8) விண்வெளி இயல், 19) உயிரியல் என மூன்று துறைகளிலும் சில கருத்துகளை உங்கள் முன் வைப்பேன். இறுதியாக உயிரியலை விளக்கும் போது (10) கால்வழி இயல் (Genetics) என்ற துறையிலும் சில கருத்துகள் விளக்கம் அடைந்து விடும்.

1. கல்வியியல்

பண்டைய கல்வி முறை பாடங்களை மையமாகக் கொண்டு நடைபெற்றது (Subject-centred). பாட அறிவை எப்படியாவது குழந்தையின் மனத்தில் புகுத்தி விட வேண்டும் என்பதற்கேற்றவாறு பயிற்றும் முறைகள் அமைந்திருந்தன. இன்றைய கல்வி முறையில் குழந்தையை மையமாகக் கொண்டு கற்பிக்கும் முறைகள் அமைந்துள்ளன. (Child-Centred) இதனால் ரூஸோ-