பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்


 கோட்பாடாகும். இவற்றை இவர் பாட்டுகள் வாயிலாகவும், படைப்பாற்றலின் துணை கொண்டும் எய்துவிக்கலாம் என்றும் கருதினார். குழந்தைகளின் புலன்களுக்குப் பயிற்சி அளித்து அவர்களைக் கூர்த்தமதியினராக்கலாம் என்றும் இவர் நம்பினார்; இக்கருத்தைச் செயல் முறையில் மெய்ப்பித்துக் காட்டிப் பெரும் புகழ் பெற்றார் மாண்டிச்சாரி அம்மையார், இன்று பல்வேறு இடங்களில் அம்மையார் கொள்கையைத் தழுவிப் பல குழந்தைப் பள்ளி நிலையங்கள் தோன்றி நடைபெற்று வருவதைக் காண்கின்றோம்.

இங்ஙனம் பல அறிஞர்கள் கல்வித் துறையில் சிந்தித்ததன் விளைவாகப் பல கற்பிக்கும் முறைகள் உருவாயின. இப்படி உருவாயின முறைகள் பத்து. இவற்றுள் ஐந்து குழுவாகக் கற்பிப்பதற்கும் ஐந்து தனியாகக் கற்பிப்பதற்கும் பயன் படுத்தப்படுகின்றன. எந்த முறையினைக் கையாண்டாலும் 'கண்டறியும் மனப்பான்மையை' (Heuristic mind) மாணாக்கர்களிடம் வளர்த்தால் போதுமானது. இந்த மனப்பான்மையுள்ள மாணாக்கர்கள்தாம் சிறந்த குடிமக்களாகத் திகழமுடியும்.

தற்காலக் கல்வி இயலார் சூழ்நிலையைத் தனக்கேற்றவாறு ஒரு குழந்தை பொருத்தப்பாடு (Adjustment to environment) அடையச் செய்தலேயாகும். என்று விளக்குவர். இதனை விளக்குவது கல்வியியலின் உயிராய கருத்தை விளக்குவதாக அமைகின்றது. எந்த உயிரியும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்ளும். இதுவே வாழ்க்கையின் 'இலக்கணம்' என்று கூடக் கூறலாம். மனிதனும் ஒருவகை உயிரியே. ஆகவே, அவனும் தன் சூழ்நிலையோடு இடையறாது இடைவினை புரிந்து 'பொருத்த பாடு' அடைகின்றான். பொருத்தப்பாடு என்பது என்ன? மனிதன் தனக்கும் தன் சூழ்நிலைக்கும் இயைந்த தொடர்பை அடையும் பொருட்டுத் தன் நடத்தையை இடைவிடாது மாற்றும் முறையே பொருத்தப்பாடு என்பது. பொருத்தப்பாடு அமைந்தால்தான் எல்லா உயிரிகளும் வாழ வழி அமையும். அன்றேல் சாக வேண்டியது தான். ஒரு செடியோ தவளையோ தான் இருக்கும் சூழ்நிலைக்கேற்ற வாறு தன்னை அமைத்துக் கொண்டால்தான் உயிர் வாழலாம்: இன்றேல் மரித்து விடும்.