பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்


நிலைக்கேற்ப இவற்றில் பொருத்தப்பாடு அடைதல் வேண்டும். இவ்வாறு பொருத்தப்பாடு அடைதலே கல்வியாகும். பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் இவை ஒவ்வொரு குழந்தையும் இந்த அறிவுக் கருவூலத்துடன் பொருத்தப்பாடு அடைவதற்குச் சமூகத்தினரால் அமைக்கப்பெற்ற நிறுவனங்களாகும்.

பிறந்த குழந்தையும் பள்ளியில் சேரும் மாணாக்கனும் இயற்பியற் சூழ்நிலைக்கும் சமூகச் சூழ்நிலைக்கும் பொருத்தப்பாடு அடைவதில் பிறர் உதவியை நாடுகின்றனர். பெற்றோரும் ஆசிரியரும் தக்கவாறு இவர்கட்கு உதவ வேண்டும். எல்லாவிதப் பொருத்தப்பாடுகளுள்ளும் தனியாளின் தேவைகளுக்கும், அத்தேவைகளை நிறைவேற்றச் சூழ்நிலை அளிக்கும் வாய்ப்புகளுக்கும் தனியாளின் திறமைகளுக்கும் இடையேயுள்ளதோர் சிக்கலான சம்பந்தம் அடங்கியுள்ளது. சூழ்நிலையைக் கட்டுப் படுத்துவதனால் தாம் விரும்பும் துலங்கல்கள் ஏற்படாவிடினும், குறிப்பிடத்தக்க விளைவுகள் ஒழுங்கான முறையில் ஒரளவு ஏற்படத்தான் செய்கின்றன. இந்த உண்மையின் அடிப்படையில் தான் கல்வி என்பது அமைகின்றது. ஆழ்ந்து சிந்தித்தபின் இந்தப் பொருத்தப்பாடே கல்வி என்றாகின்றது.

எனவே, கல்வி ஏற்பாட்டின் முதல் விதி யாது? நிகழ்ச்சிகள், செயல்கள், தொடர்புகள் முதலியவற்றைத் திட்டமிடுங்கால் அவற்றிற்கொத்த பொருள்களைத் தேர்ந்தெடுத்தல் வேண்டும். இவ்வாறு ஒழுங்காக அமைத்த அநுபவங்களினால் கற்போரிடம் ஏற்படும் துலங்கல்கள் குறிப்பிடத்தக்க செய்தியைத் திரட்டித் தருகின்றன; அவர்களிடம் பயன்படத் தக்க பழக்கங்கள் ஏற்படுகின்றன. சொந்த முறையில் பண்பாடும் சமூக வாழ்வும் அமைவதற்கேற்ற மனவெழுச்சியின் பலன்களும் திரள்கின்றன. சமூகமும் ஒழுங்கான கல்வியினால் கற்போரிடம் சரியான பொருத்தப்பாடு அமைவதற்கேற்ற நிலைமைகளைத் தேர்ந்தெடுக்க விரும்புகின்றது. இதனால் நல்ல, பரந்த, விதவிதமான அநுபவங்களை உறுதியாகப் பெறவும் எண்ணுகின்றது. இங்ஙனமே, கல்வி நிறுவனங்களின் ஆட்சியும், பயிற்றும் முறைகளும் வசதியான சூழ்நிலை, பரிவுடைய வழி, தூண்டவல்ல தொடர்புகள் ஆகியவற்றின் அடிப்படைகள்கற்றலில் அநுபவங்கள் அமைத்துத் தர வழி கோல வேண்டும்; காலக் குறைவிலும் முயற்சிச் சிக்கனத்திலும் தக்கப் பொருத்தப்பாடுகள் அமைதல்