பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல் - இன்று

79


வேண்டும். ஒரு சிறந்த கற்றறிந்த வல்லுநராகவும், ஒரு சிறந்த பொறியாளராகவும், ஒரு சிறந்த மருத்துவராகவும் குறைந்தது முப்பதாண்டளவும் கற்கவேண்டியுள்ளது என்பது நடைமுறையிலுள்ள நிலைமையாகும்.



2. உளவியல்

உளவியல் மிகவும் ஒரு கவர்ச்சி வாய்ந்த துறை. இது நம்முடைய உளத்தைப் பற்றிப் பல்வேறு செய்திகளைத் தொகுத்தும் வகுத்தும் விளக்குவது. இன்றும் சில அறிஞர்கள் உளவியல் இன்னும் சரியாக முறைப்படுத்தப் பெறாத அறிவுத்துறை என்றும், அது தனி அறிவியல் துறையாக விளக்குவதற்கேற்ப முதிர்ச்சி அடையவில்லை என்றும் கூறிவருகின்றனர். உளவியலால் 'உளத்'திற்குத் தகுதியான இலக்கணம் வரையறையுடன் கூறவியலாதாயினும், அஃது உளத்தை நன்கு விளக்க வல்லது என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். நான் உளவியலைப் பெருவிருப்புடன் கற்றவன். 1940-41 சைதை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்றபோது எனக்குக் 'கல்வி உளவியல்' கற்பித்தவர் பேராசிரியர் குருசாமி, ரெட்டியார் எம். ஏ. (Cantab), ஐ. இ. எஸ். மனநிலை சற்று மாறுபட்டிருந்தவர். காதலில் தோல்வியுற்று மனைவியின்றித் தனியாக வாழ்ந்தவர். இவரே சில உளவியல் உண்மைகட்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர். இவர் வகுப்பில் நூற்றுக்கணக்கான உளவியல் நூல்களை அறிமுகம் செய்தவர். அப்பொழுது தேர்வுக்காகப் பல நூல்களைப் பயின்றேன். பின்னர் 1950-60இல் காரைக்குடி அழகப்பர் ஆசிரியர்ப் பயிற்சிக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பு என் தலை எழுத்தாக இருந்தபோது கல்வியல், கல்வி உளவியல் பற்றி நூற்றுக்கணக்கான நூல்களைப் பயில நேர்ந்தது. அவற்றையெல்லாம் மிக்க ஆர்வத்துடன் கற்றேன். இந்த ஆர்வத்தின் விளைவாகப் பிறந்தவை மூன்று நூல்கள் : தமிழ் பயிற்றும் முறை, அறிவியல் பயிற்றும் முறை, கல்வி உளவியல் கோட்பாடுகள். மூன்றும் பெரிய நூல்கள். மூன்றாவது நூல் எனக்கு அன்பு மகளாக இருப்பவள். ஏனைய இரண்டும்