பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்


ஆண் பிள்ளைகள். அப்பொழுது ஏதோ ஒரு நூலில் படித்தது நினைவிற்கு வருகின்றது. எவரோ ஒருவர் உளவியலைப் பற்றி வினவும் போது, What is mind? என்று கேட்டாராம். அதற்கு அவர் தூலமாக ஒன்றைக் கூறமுடியாது என்ற கருத்தை No matter என்று மறு மொழி பகர்ந்தாராம் முதலில் வினவியவர் What is matter? என்று மேலும் வினவ Never mind என்று, பதிலிறுத்தாராம். இந்த உரையாடலில் உளவியல் என்பது பற்றிச் சிறிது ஒளி தெரிகின்றது எனலாம்.

உளத்திற்குத் தகுதியான இலக்கணம் கூறமுடியாதிருப்பதற்குக் காரணங்கள் பலவாகும். முதலாவதாக, நாம் 'உளம்’ என்று கூறுந்தன்மையே பலவிதத்திலும் வரையறையற்றதாகும். உளவியல் முறைப்படி வரையறுக்க முடியாததுமாகும். இரண்டாவதாக, உளத்தைக் கொண்டுதான் உளத்தை அறிய வேண்டியுள்ளது, உடலின் பல உறுப்புகளையும் அறிவதற்கு ஓருறுப்பாகிய மூளையைக் கொண்டு அறிவதுபோல. இதனால் இயற்கையாகவே பல குழப்பங்கள் எழுகின்றன. மூன்றாவதாக, உளம் என்பது ஒரு பொதுக்கருத்தையும் குறிக்கலாம்; அல்லது தனி மனிதனுடைய உள்ளத்தையும் குறிக்கலாம்; உளத்தைப் பொதுக் கருத்தாகக் கருதினால் அப்போது ஏற்படும் குழப்பங்கள் மிகுதியாகின்றன. நான்காவதாக, உளத்திற்கு இலக்கணம் கூறுவது மனிதனுடைய உளத்திற்கு மட்டிலுமா? அல்லது பொதுவாக மனிதனிலும் தாழ்ந்த உயிரினங்களிடையே காணப்பெறும் உளக்கூறுகளுக்கும் சேர்ந்ததா என்ற வினாவும் எழுகின்றது. ஐந்தாவதாக, பல்வேறு பட்ட தத்துவ அறிஞர்கள் பல்வேறு காலங்களில் தத்தம் தத்துவக் கொள்கைக்கு ஏற்ப உளத்திற்கு இலக்கணம் கூறுவோராக உள்ளனர்.

ஆயினும், வுண்ட் (Wundt) என்ற அறிஞர் 1879இல் செருமானிய நாட்டில் லிட்சிக் நகரில் முதல் உளவியல் ஆராய்ச்சி நிலையத்தை நிறுவின காலம் முதல் கடந்த நூறுயாண்டுகட்கு மேற்பட்டகாலத்தில் உளவியல் பல விதமாக முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆகவே, அஃது இன்னும் இளம் பருவத்தில் இருப்பதாகக் கூறுவதற்கில்லை. ஆயினும், உளவியல் இன்னும் அஃது ஆராயும் மனிதனுடைய உள்ளம், அவனுடைய ஆளுமை, நடத்தை போன்ற கருத்துகளை