பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-இன்று

81


அறுதியிட்டுக் கூற முடியாமல் இருப்பதே உளவியல் தெளிவற்றிருப்பதற்குக் காரணமாகும். அன்றியும், அறிவியல் ஆராய்ச்சியில் பயன்படும் தராசு, சோதனைக் குழல் போன்ற துணைக்கருவிகளை முதன்மைக் கருவிகளாகப் பயன்படுத்த முடியாதிருப்பதும் மற்றொரு காரணமாகும்.

நீண்டகாலமாக மக்கள் உள்ளத்திலுள்ள நனவுப்பகுதியை மட்டிலுமே 'உளம்' என்று கருதி வந்தனர். ஃபிராய்ட் (Freud) என்ற உளவியல் அறிஞர் மேற்கொண்ட ஆராய்ச்சியின் பயனாக இக்கருத்து முற்றிலும் மாறிவிட்டது. நனவுநிலை (Conscious level) நனவிலி நிலை (Unconscious level) நனவடி நிலை (Sub-conscious level) என உளம் முப்பகுதிகளாகக் செயற்படுவதாகக் கூறுகின்றார் ஃபிராய்ட். இக்கருத்தினை இன்று உளவியல் அறிஞர்கள் அனைவரும் ஒரு மனத்துடன் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த உளவியல் நிலைகளை விளக்குவதற்கு வில்லியம் ஜேம்ஸ் என்ற உளவியலறிஞர் ஒர் அரிய உவமையைக் கையாளுகின்றார். வட பெருங் கடலினின்றும் பெரும்பனிக்கட்டி மலைகள் விடுபட்டு அட்லாண்டிக் மாபெரும் கடலில் புகும். இம்மலைகளின் கொடுமுடிகளின் எட்டில் ஒரு பகுதியே புறத்தே புலனாகும். பனிக்கட்டி மலை யொன்றினை முழு உள்ளத்துடன் ஒற்றுமைபடுத்திக் கூறும் பொழுது சிறிதளவு தோன்றும் கொடுமுடியை நனவு உள்ளத்தோடு ஒப்புமை கூறலாம். அங்ஙனம் நிலையாகத் தோன்றிக்கிடக்கும் பகுதிக்குக் கீழேயுள்ள சிறுபகுதி சுற்றியுள்ள அலை வீச்சினால் தோன்றியும் வரும். இதனை நனவடி நிலையுடன் ஒப்புமை கூறலாம். இதற்குக் கீழாகப் பெருமலைபோல் கிடக்கும் பகுதி தாக்கினால், பெருங்கப்பல்களும் அச்சு வேறு ஆணி வேறாகச் சிதையக் காண்கின்றோம். இதனை நனவிலி உளத்திற்கு ஒப்பிடலாம். நனவு உளம் முழுஉள்ளத்தில் கோடியில் ஒரு பங்கே என்றும் கூறிவிடலாம். புறக்காற்றாலும் பிறவற்றாலும், இந்தப் பணிக்கட்டி மலை தலைகீழாகப் புரள்வதும் உண்டு. அது போலச் சில சமயம் நனவிலியுளமும் நனவு உளமாக மாறுவதும் உண்டு. இத்தகைய உளமாற்றம் சிறுகச் சிறுகவும் எழலாம்; திடீர் என்றும் நேரிடலாம். எப்படிப் பனிக்கட்டி மலையின் பெரும்பகுதி புறத்தே புலனாகாமல் நீரின் அகத்தே ஆழ்ந்துள்ளதோ, அதுபோன்று நனவிலியுள-
த-6