பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல் - இன்று

83



விடு' என்கின்றார் நண்பர். அவருடன் பரிந்துரைக்காகச் செல்லும் நண்பர் 'கிருஷ்ணாம் பேட்டையன்றோ அலுவலர் உரையும் இடம்?’ என்று நினைப்பூட்டுகின்றார். 'வாய்தவறிச் சொல்லிவிட்டேன்' என்கின்றார். நண்பர் 'கிருஷ்ணன்' என்ற சொல்லை மறந்ததற்கும், 'இராயர்' என்ற சொல்லை நினைத்ததற்கும் காரணம் என்ன? 'இவையனைத்தும் வாயின் தவறு அன்று' என்பதை நாம் அறிவோம். 'இது நனவிலி உளத்தின் திருவிளையாடலே' என்பதனை நன்கு உணர்வோம். காஃபிகொடாத கிருஷ்ணனை மறந்து, காஃபி கொடுத்த இராயரை விரும்பி நினைப்பது அவரையும் அறியாது இயங்கும் நனவிலி உளத்தின் செயலாகும். 'கை தவறி எழுதினேன்,' வாய்தவறிப் பேசினேன்,' 'நெஞ்சில் இருக்கிறது; நினைவிற்கு வரவில்லை’ என்று கூறும் பொழுதெல்லாம் இத்தகைய கண்கட்டு வேடிக்கையே நிகழ்கின்றது என ஃபிராய்டு என்பார் கணக்கற்ற உண்மை நிகழ்ச்சிகளைக் கொண்டு தெளிவாக விளக்குவர். அமெரிக்காவிலுள்ள மெக்சிகோ வளைகுடாவிலிருந்து வெப்ப நீரோட்டம் ஒன்று புறப்பட்டு ஐரோப்பாவின் மேற்குக் கரையை வந்து அடைகின்றது. இஃது அட்லாண்டிக் மாபெருங் கடலினுள்ளே மறைந்தோடி வந்து ஐரோப்பாவை அடையும் போதுதான் வெளிப்பட்டுத் தோன்றுகின்றது, அது போலவே நாம் பேசும் பேச்சும், செய்யும் செயலும்,வேறு பிறவும் இவ்வாறு நனவிலியுளமாகிய மாபெரும் கடலிடையே மறைந்தோடிப் பின்னர் நனவு உள்ளத்தில் புகுந்து எழுந்து தோன்றுவனவாகும். சென்ற பொழிவில் காட்டிய வீடணனின் புலம்பலில் வெளிப்பட்ட சூர்ப்பணகையின் உள்நோக்கம் இந்த நனவிலி உளத்தின் செயற்பாடே யாகும்.

நமக்கு அவமானம் போன்ற துன்ப அநுபவம் நேரிடும் பொழுது நனவிலியுளம் வந்து அதனை நனவு உளத்தினின்றும் நீக்கித் தன்னுளே அடக்கி வைத்துக் கொண்டு நமக்குத் துணை செய்கின்றது. அப்போது அந்த அநுபவம் நமக்கு ஏற்படாதது போலவே ஆய்விடுகின்றது. அதனால் அந்த அநுபவத்தால் ஏற்படவிருந்த துன்பம் நீக்கப் பெற்றுவிடுகின்றது. ஆயினும் நனவிலியுள்ளத்தில் அடங்கும் அத்தகைய அநுபவங்கள் செயலற்றுப் போவதில்லை; நீறு பூத்த நெருப்புபோல் அவை