பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

தமிழில் அறிவியல் -அன்றும் இன்றும்


அணுவின் நுட்பம் முழுவதையும் அறிந்தால் இயற்கையின் இரகசியம் முழுவதையும் அறிந்து கொள்ள இயலும். இதனை முழுவதையும் அறிந்தவர் யார்? கற்றது கைமண் அளவுதான்; கல்லாதது உலகளவு உள்ளது. இன்று வரையில் மனிதன் அணுவினைப் பற்றி அறிந்துள்ள நுட்பங்களை எண்ணிப் பார்த்தால் அவன் கண்ட உண்மையின் பெருமை சென்றவழியின் அருமை, ஆராய்ச்சியின் திறமை ஆகியவை யாவும் விளங்கும். அவனுடைய அறிவு அணுவின் சிற்றளவு செல்லக் கூடிய மிகக் கீழான நிலைக்குச் சென்று அதனைக் காண முனைகின்றது. ஓர் எடுத்துக் காட்டால் இதனைத் தெளிவாக்க முயல்வேன். அட்டமா சித்திகளைப் பற்றிக் கேள்வியுற்றிருக்கின்றோம். திருவிளையாடற் புராணத்தில் இவை பற்றிய செய்திகள் வருகின்றன. எண் வகைச் சித்திகளுள் ஒன்று அணிமா என்பது. இது மிகப் பெரிய பொருள்களைச் சிறியனவாக மாற்றுவது. அகத்தியர் கடலைக் குடித்த வரலாறு இந்தச் சித்தியால்தான் நிகழ்ந்தது. மிகப் பெரிய அளவு கடலை ஒரு சிறிய துளியளவாகச் செய்து உண்டு விட்டதாகக் கதை. இரண்டாவது சித்து மகிமா என்பது. இதன் துணையால் ஒரு பொருளை விருப்பம்போல் விம்மிப் பருக்கச் செய்யலாம். அணுவினை அண்டமாக்கும் மகிமா சித்து விளையாடும் ஒருவரிடம் ஒரு நீரிய அணுவினையும் (Hydrogen, atom) ஒரு பந்தினையும் கொடுத்தால் அவர் அந்த இரண்டினையும் தம் உள்ளங் கைகளில் வைத்துக் கொண்டு சித்து விளையாடுகின்றார் என்று கருதுவோம். சித்தின் மகிமையால் அவை இரண்டும் ஒரே வீதத்தில் விம்மிப் பெருகிக் கொண்டே போகும். ஒரு சமயத்தில் பந்து இவ்வுலகம் அளவு பெரிதாக விம்மித் தோன்றுங்கால், அணு சிறுவன் ஒருவன் விளையாடும் பந்து அளவுதான் தோன்றும். பந்துக்கும் உலகுக்கும் எவ்வளவு வேற்றுமை என்பதை எண்ணிப் பாருங்கள்! அணு அவ்வளவு துட்பமானது. ஆனால் அதனைக் கொண்டுதான் அறிவியலறிஞர்கள் பண்டைய சித்தர்கள்போல், பந்தாட்டமும் கோலியாட்டமும் விளையாடுகின்றனர். எல்லா விளையாட்டுகளும் நடைபெறுவது அவர்களது கற்பனையுலகில் தான்!

இன்னோர் எடுத்துக்காட்டாலும் அணுவின் நுட்பத்தினை விளக்குவேன். ஓர் அங்குல நீளம், ஓர் அங்குல அகலம், ஓர்