பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

137


'வைகை-7. இந்த மாத வைகை உங்கள் கைக்கு மாதக் கடைசியில் மிகவும் சிரமப்பட்டுக் கிடைக்கக் காரணம் விஷய வறட்சியே. விமர்சனங்களுக்கு-விமர்சனங்களுக்கு மட்டுமே-முதலிடம் தரவேண்டும் என நினைத்தது வறட்சியில் கொண்டு நிறுத்திவிட்டது. சிறுகதைகள், கவிதைகள் எழுதுகிற வேகம் நமது படைப்பாளிகளுக்குக் கட்டுரைகள் எழுதுவதில் இல்லை. வெளியாகிற சிறுகதைகள், கவிதைகளுக்கு ஒரு உருவமும் வரைமுறையும் அமைத்துக் கொடுப்பது சிறந்த விமர்சனங்கள் மட்டுமே. ஏனோ இதை யாரும் சரியாகச் செய்ய மாட்டேன் என்கிறார்கள்.’

11-வது இதழ் விமர்சன இதழாக அமைந்திருப்பதைக் குறிப்பிட வேண்டும். 'சுந்தர ராமசாமியின் குரங்குகள்' என்ற ந. முத்துசாமி கட்டுரை; 'சோவியத் நாட்டில் ஒரு தமிழ் மாணவி' (வி. எஸ். கமலா எழுதிய புத்தகம் பற்றி) விமர்சனம், 'கண்டதும் கேட்டதும்'- ஒரு சுய விமரிசனம். ஜி. நாகராஜன் அவருடைய கதைத் தொகுப்பு பற்றி அவரே எழுதியது).

தமிழில் சிறு பத்திரிகைகள், சிறு பத்திரிகைகளின் வாசகர்கள் பற்றி ஒரு சிந்தனை இந்த இதழின் தலையங்கமாக அமைந்துள்ளது. அது நினைவில் நிறுத்தப்பட வேண்டிய ஒன்று.

“தமிழில் சிறு பத்திரிகைகளுக்கு முப்பது வருஷத்திற்குக் குறையாத சரித்திரம் இருக்கிறது. இவற்றில் எழுதியவர்களும், இவற்றோடு சம்பந்தப்பட்டவர்களும் தவிர, ஒருமித்த பொறுப்பும் ரசனையும் கோபமும் உள்ள வாசகர்களும் சேர்ந்தே ஒரு புனிதப் போரென்ற வெறியோடு தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்தால், சராசரி தமிழ் வாசகனின் தரத்தை உயர்த்தியிருக்க முடியும். தமிழ்க் குடும்பங்களைக் கொஞ்சமாவது நாகரிகமும் பெருந்தன்மையும் புத்தியும் உள்ளவையாக்கியிருக்க முடியும். (அரை) நிர்வாணப் படங்களோடு ( பொது இடங்களில் வால் போஸ்டராக இருந்தால் முகம் சுளிக்கப்படுகிற படங்கள், பத்திரிகைகளாக வீட்டில் பிரவேசிக்கிற முரண்பாடு வேடிக்கையானது) நரம்பு நோயாளிகளுக்காக நரம்பு நோயாளிகளால் நடத்தப்பட்டு எழுதப்பட்டு படம் போடப்பட்டு வருகிற பத்திரிகைகள் அப்பா, அம்மா, அண்ணன், தங்கை, தம்பி, குழந்தைகள் என்று எல்லோராலும் வெட்கமில்லாமல் படிக்கப் படுகிற அநாகரிகத்தைக் கட்டுப்படுத்தியிருக்க முடியும். விரசமும் வக்கிரமும் தமிழ்க் குடும்பங்களில் அன்றாட நடவடிக்கையாகிவிட்டது.