பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

வல்லிக்கண்ணன்


பக்கங்கள் குறைந்தும் கூடியும் வந்தன. ஒரு இதழ் பத்தே பக்கங்கள்- இரண்டு கட்டுரைகள் கொண்டிருந்தது.

இதற்கெல்லாம் எழுதுகிறவர்களையே அது குறை கூறியது. -வைகை-12-ல் காணப்படும் குற்றச்சாட்டு இது

“வைகை தொடங்கியபோது வாசகர்களுக்கு மட்டுமின்றி எழுதுகிற வர்களுக்கும் சில அக்கறை இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு இருந்தது. எழுதுகிறவர்களின் தயக்கத்தையும் இடைவெளியையும் பார்க்கிறபோது நம்பிக்கையின்மைதான் மிஞ்சுகிறது. எழுதுகிறவர்கள் வேறு வேறு துறைகளில் கவனம் செலுத்துவதில்லை என்பது நல்ல அறிகுறியில்லை.

உண்மையான பிரச்னைகள் எவை என்று கண்டுகொள்ள உதவி செய்கிற, அவற்றின் தீர்வுக்கு விஞ்ஞான பூர்வமான அணுகல் தருகிற எழுத்தை விரும்புவதாய் எப்போதும் வைகையின் பக்கங்களில் அறிவிக்கப்பட்டிருக்கிறது . ஆனால் high-brow குணமுள்ள எழுத்துக்களே வைகையை ஆக்கிரமிப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இது பற்றிய முழு விவாதத்தை வைகை வரவேற்கிறது.

ஒரு சிறு பத்திரிகையின் தொனி அதோடு சம்பந்தப்பட்டிருக்கிறவர்களாலும் அதில் எழுதுகிறவர்களாலும் பெரும்பாலும் தீர்மானிக்கப்படுகிறது. வைகைக்காக நிராகரிக்கப்பட்ட விஷயங்கள் மிகவும் குறைவென்பதால் எழுதுகிறவர்களையே- எழுதாதவர்களையே-குற்றம்சாட்ட வேண்டியிருக்கிறது.”

வைகை அதன் இறுதிக் கட்டத்தில் 'மணிக்கொடி' மீது தனது கவனத்தைத் திருப்பியது. கு. ப. ரா. சிறப்பிதழ் வெளியிடுவதில் அக்கறை கொண்டது. மணிக்கொடியில் வந்த 'யாத்ரா மார்க்கம்' பகுதியில் வெளியான குறிப்புகளையும் சூடான விவாதங்களையும் வைகை 27, 28 வது இதழ்களில் மறுபிரசுரம் செய்தது.

‘யாத்ரா மார்க்கம்' பகுதியில் புதுமைப்பித்தன் இலக்கியக் குறிப்புகள் எழுதினார். அதில் அயல்நாட்டுக் கதைகளைத் தமிழில் தழுவி எழுதுவதைக் கிண்டல் செய்திருந்தார். நேரடி மொழிபெயர்ப்பை அவர் ஆதரித்தார். பாரதி பாடல்கள் பிரசுரிக்கப்பட்ட விதத்தையும், பாடல்களில் காணப்பட்ட மாற்றங்களையும் குறிப்பிட்டு ஒரு தடவை எழுதினார். தழுவல் விஷயத்தில் அவர் சுட்டிக்காட்டிய ஒரு பெயரும் படைப்பும் பலரிடமிருந்து எதிர்ப்புகளைப் பெற்றுத் தந்தன. மொழிபெயர்ப்பு-தழுவல்