பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

165


இளவேனில், உணர்ச்சிகரமான அழகிய நடையில் 'கவிதா' கட்டுரைத் தொடரில், இக்கருத்துக்குச் சாதகமான இலக்கியப் படைப்புகள் பற்றி விரிவாக எழுதினார்.

கே. முத்தையா, தமிழ்நாடு சி. ஐ. டி. யூ. தலைவர் கே. ரமணி, ஜோதிர்லதா கிரிஜா-பேட்டிகள் இடம்பெற்றன.

வாசகர் கருத்து 'பட்டறை' என்ற பகுதியில் வெளியிடப்பட்டது. வாசகர்கள் உள்ளது உள்ளபடி விமர்சிக்கத் தயங்கவில்லை.

‘நந்தனார் நாட்குறிப்பு' எனும் பகுதி சுவாரஸ்யமாக இருந்தது. கலை, இலக்கிய வட்டாரப் பிரமுகர்களைப் பற்றிய சுவையான தகவல்களும் கிண்டல் குறிப்புகளும் இதில் காணப்படும்.

'ஆஸ்தான கவி பதில் தருகிறார்' என்ற கேள்வி-பதில் பகுதியும் விறுவிறுப்பாக அமைந்திருந்தது.

கே. முத்தையா 'சிலப்பதிகாரம்- உண்மையும் புரட்டும்' என்றொரு நீண்ட கட்டுரைத் தொடரை சிகரத்தில் எழுதி, இலக்கியவாதிகள் மற்றும் ஆய்வாளர்களின் சிந்தனையைத் தூண்டியிருக்கிறார்.

முற்போக்கு நாவல்கள், சிறுகதைப் புத்தகங்கள் பற்றி விரிவான விமர்சனங்கள் எழுதப்பட்டன.

சிகரம் 'மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரிக்கும் இலக்கிய ஏடாகவும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அடியொற்றி நடக்கின்ற ஏடாகவும்' விளங்கியது. ஆகவே, தமிழ் எழுத்தாளர் சங்கம், தமிழ் எழுத்தாளர்கள் கலை இலக்கிய பெருமன்றம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பற்றிய தனது எண்ணங்களை செந்தில் நாதன் விரிவாகவும் வெளிப்படையாகவும் தொடர்ந்து எழுதினார்.

மூன்றாவது வருஷத்தில் 'தமிழ்-தி. மு. க. கம்யூனிஸ்ட்' பற்றிய அபிப்பிராயங்களை வெளியிட்டார்.

‘சிகரம்' சிறுகதை, கவிதைத் துறைகளைவிட 'கட்டுரை' யில்தான் குறிப்பிடத்தகுந்த வெற்றி கண்டிருக்கிறது.

இதை ஆசிரியரே உணர்ந்து, ஒரு இதழில் குறிப்பிட்டிருக்கிறார். மார்க்ஸிய தத்துவக் கண்ணோட்டத்தில் எழுதப்படுகிற கதைகளை, அந்நோக்கில் எழுதுகிற இளம் எழுத்தாளர்களின் கதைகள், கவிதைகளையும்