பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



33. புதிய வானம்


தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் குமரி மாவட்டக் கிளை தயாரித்து வெளியிட்ட முற்போக்கு இலக்கிய இதழ் 'புதிய வானம்'

இதன் மலர்ச்சி குறித்து அவர்கள் அழகாக அறிவித்திருக்கிறார்கள்—

‘மாலையில் நிறையச் சிரித்துக் கொண்டும், சில வேளைகளில் எங்களுடைய சாதனைகளின் மேல் பூப் பின்னிக் கொண்டும், இந்த சாதனைகளின் மத்தியில் ஒருவருக்கொருவர் இன்பமாக நெருங்கி வந்து கொண்டும் நாங்கள் கடைசியில் படிப்படியாகக் கலை இலக்கியப் பெரு மன்றமென்னும் ஒரு முழுமையான ஒன்றாக மாறிப் போனோம்.

குமரி மாவட்டக் கலை இலக்கியப் பெருமன்றத்தின் நெடுநாளையக் கனவு தன் முதல் இதழ்களை விரித்திருக்கின்றது. முற்போக்குக் கலைநெஞ்சங்களின் இதயச் செழிப்பில் வேர்பரப்பி, மனித இல்லங்களின் முன்றில்களில் கொடி வீசி, மெல்லப் படர்ந்து வந்த செல்லச் செடி அபூர்வமாக மொட்டெடுத்து அழகாக இதழ் விரிக்கத் தொடங்கி இருக்கிறது.

ஆனால் இது அழகுக்காக, செல்வ மாளிகையின் முற்றத் தொட்டிகளில் வளர்ந்து, அடுக்கடுக்காகப் பூத்து உதிர்ந்து போகும் வெறும் அழகு மலர் இல்லை. பூக்குங்கால் அழகு, புதிய மணம், இனித்திடுந் தேன்.

ஆனால், பூ கருத்தரிக்கும், காய் காய்க்கும், கனிந்து விதை கொடுக்கும். இந்த ஓராயிரம் விதைகள் உங்கள் முற்றங்களில் விழுந்து நூறாயிரம் செடிகளைத் தோற்றுவிக்கும். எங்கள் ஒரு பூ உங்கள் வீடு களைச் சுற்றி ஒரு கோடி பூக்களை விரிய வைக்கும். இது எங்கள் நம்பிக்கை !'

'புதிய வானம்' இலக்கியப் பிரக்ஞை உடையவர்கள் மத்தியில் மட்டும் பரவினால் போதாது என்று அவர்கள் கருதினார்கள்.

‘களையெடுத்துக் களைத்து, நீரோடையில் காலாட, வயல் வரப்புகளில் உட்கார்ந்திருக்கும் சகோதரிகள். சங்கொலி பிதுக்கித் தள்ளச்