பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

300

வல்லிக்கண்ணன்


எனவேதான், பிரபலம் — புதுமுகம் என்ற பேதமின்றி, தரமாக எது வரினும் ஏற்றுப் பிரசுரிக்கும் நிலைக்குத் தயாராயிருக்கின்றோம்.

இந்த இலக்கிய வேள்வியில் கலந்து கொள்ளுமாறு படைப்பாளிகளையும், ஆர்வலர்களையும் இருகரங்கூப்பி வரவேற்கின்றோம்.’

இவ்விதம் அறிவித்துக்கொண்டு ‘தாரகை‘ ஆகஸ்ட் 1981-ல் தோன்றியது. ஆசிரியர்- சி. சங்கரம் பிள்ளை. ஆசிரியர் குழு : கண். மகேஸ்வரன், இந்திராணி தாமோதரம் பிள்ளை. பிரசுரமான இடம் மட்டக்களப்பு.

மரபுக் கவிதை, புதுக்கவிதை, கதைகள், நகைச்சுவைச் சித்திரம், சமூக சீர்திருத்த நோக்குடைய கட்டுரைகளை தாரகை பிரசுரித்தது.

முற்போக்கு இலக்கிய உணர்வுடன், ‘மல்லிகை‘ போல் தரமான இலக்கிய ஏடு ஆகக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்துடன் ‘வசந்தம்‘ 1981-ல் ஆரம்பிக்கப்பட்டது. வசந்தம் இலக்கிய வட்டத்தினருக்காக நடத்தப்பெற்ற இந்த சஞ்சிகை யோகநாதன் கவனிப்பில் வளர்ந்தது. கைலாசபதி, சிவத்தம்பி கட்டுரைகள், யோகநாதன் கதைகள், கிருஷன்சந்தர் என்ற இந்தி ஆசிரியரது படைப்புகளின் மொழிபெயர்ப்பு முதலியவற்றை வெளியிட்டது. தமிழகத்திலிருந்து பொன்னீலன், கவிஞர் பாப்ரியா, ருத்ரய்யா ஆகியோரின் எழுத்துக்களும் இதில் பிரசுரமாகியுள்ளன .

யாழ்ப்பாணத்திலிருந்து 1981-ல் வெளிவந்த மற்றுமொரு பத்திரிகை ’கிருதயுகம்‘. ஆசிரியர் : க. வீரகத்தி.

‘ஊனுயிர் நான் உளவரைக்கும்
ஒருலகர சென்றே பாடி
மானுட நேசிப்பை வளர்ப்பேன்
என்பதை புன்னகை பூக்கும்‘

இவ்வரிகளை இலட்சிய எண்ணமாகக் கொண்டிருந்தது. பேராசிரியர் கைலாசபதி ஒரே உலகம் பற்றி எழுதிய கட்டுரை சரியான இடத்தில் சரியான சொல்லைப் பயன்படுத்தக் கூடிய சீரான மொழியாட்சியை வலியுறுத்தி முனைவர் சாலை இளந்திரையன் எழுதிய கட்டுரை; மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடு ஆராய்ச்சிக் கருத்தரங்குகள் பற்றி முருகையன் எழுதிய கட்டுரை; மற்றும் காவலூர் ஜெகநாதன் கதை;